திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ராகேஷ், தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ராகேஷ் அதே பகுதியில் உள்ள தனது பெரியம்மாவின் வீட்டிற்கு படிக்கப் போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர், பெரியம்மா வீட்டின் மாடி அறைக்குச் சென்ற ராகேஷ் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனின் தாத்தா, மாடிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அறையின் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. பிறகு நீண்ட நேரம் கதவு தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ராகேஷ் தூக்கிட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ராகேஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த 4 மாதங்களாகத் தொடர்ச்சியாக செல்போனில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்துள்ளாரா ? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்பது பற்றியும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என ராகேஷ் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தொடர்ச்சியாக, ஆன்லைன் விளையாட்டால் மாணவர்களும், இளைஞர்களும், தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.