பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நாயகனின் தந்தையாக நடித்த நெல்லை தங்கராசுக்கு வீடு கட்டிக்கொடுக்க மாவட்ட ஆட்சியர் முடிவு எடுத்த சம்பவத்தைத் தொடர்ந்து பலரும் த.மு.எ.க.ச நிர்வாகிகளுக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நெல்லை தங்கராசு. நாட்டுப்புற கலைஞரான தங்கராசு சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நாயகனின் தந்தையாக நடித்துள்ளார்.
தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படத்தில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நெல்லை தங்கராசுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோரும் சிறந்த கலைஞருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
அந்தவகையில், இந்த வருடமும் த.மு.எ.க.ச சார்பில் நாட்டுப்புறக்கலைஞர் நெல்லை தங்கராசுக்கு நாட்டுப்புற கலைச்சுடர் விருது கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து த.மு.எ.க.ச நிர்வாகிகள் சிலர் நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ வீதியில் உள்ள தங்கராசு இல்லத்திற்குச் சென்றனர். அங்கே சென்ற நிர்வாகிகள் தங்கராசு இல்லத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிதிலமடைந்த கூரை வீட்டில் இருந்து வெளியே வந்த மகத்தான நாட்டுப்புறக் கலைஞரின் ஏழ்மையை போக்க முடிவு எடுத்த த.மு.எ.க.ச நிர்வாகிகள் தங்கள் வந்த காரியத்தை கூறி அழைப்பிதல் அளித்துவிட்டுச் சென்றனர்.
இதனையடுத்து அடுத்தநாளே வறுமையில் குடிசை வீட்டில் வசதித்து வந்த நெல்லை தங்கராசுக்கு உதவிடக் கோரி, நெல்லை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றனர் த.மு.எ.க.ச அமைப்பினர். இந்த சம்பவத்தைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக த.மு.எ.க.ச நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளார்.
அதன்படி, தங்கராசுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒன்றை ஒதுக்கித்தர ஆட்சியர் விஷ்ணு முன் வந்துள்ளார். மேலும், தற்போது ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக 2500 ரூபாய் சம்பளத்திற்கு வேலைப் பார்க்கும் அவரது மகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தற்காலிக வேலைக்கு ஏற்பாடு செய்து தர உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர் என்ற அடிப்படையில் தங்கராசு அவர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 3000/- பெற சிபாரிசுக் கடிதம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தாண்டு வாழ்வாதாரம் சிதைந்த சூழலில் தங்கராசுக்கு ஏதேனும் நிதியுதவியை த.மு.எ.க.ச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நெல்லை வரும்போது அளிக்கலாம் என்ற அடிப்படையில் த.மு.எ.க.ச நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதன்படி தற்போதுவரை 68,000/- நிதி சேர்ந்துள்ளது. மேலும், நேற்று மாவட்ட ஆட்சியர் 70,000/- ரூபாய்க்கான காசோலையை அவரது மகளிடம் வழங்கினார். த.மு.எ.க.ச நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசு அவர்களுக்கு விருது வழங்கியதன் பின்னணியில் இவ்வளவும் நடந்துள்ளது. அது பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது.
இவரைப்போல நலிவுற்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் பலரும் உள்ளனர். அவர்களையும் ஆதரிக்க அந்தப்பகுதியில் உள்ளவர்கள் முன்வர வேண்டும் என்பதே தமுஎகச அமைப்பின் குறிக்கோளாகும் என நிர்வாகிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.