இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லை!
மதுரை எய்ம்ஸ்கான பெரும் போராட்டத்துக்கு மக்கள் தயாராக வேண்டும் என மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-
“இன்றோடு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்நாட்டி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. வரும் ஆண்டாவது எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு சட்டென பதில் சொல்லிவிட முடியாத நிலையே இருக்கிறது.
கடந்த வாரம் மத்திய அரசின் சுகாதாரத்துறைச் செயலாளரையும் இணைச்செயலாளரையும் சந்தித்துப் பேசினேன். ரூ.1,200 கோடி திட்டம் ரூ.2,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதற்கான முழுமையான விளக்கத்தை அவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த உயர்வுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டும். அதுவும் உடனடியாக நடக்குமா என்ற கேள்விக்கும் முழுநம்பிக்கையான பதில் கிடைப்பதில் சந்தேகம் உள்ளது.
ஜெய்க்கா நிறுவனத்தோடு மார்ச்சு இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் எனக் கூறியுள்ளனர். மத்திய அமைச்சரவை ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் வழங்கினால்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
மாநில அரசு இத்திட்டத்தை இன்று வரை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தன்னிடம் உள்ள நிலத்தை மத்திய அரசுத்துறைக்கு வகை மாற்றித்தருவதற்கு இரண்டு ஆண்டுகள் எடுத்துச் சாதனை புரிந்துள்ளது அதிமுக அரசு. அதுவும் பலமுறை நினைவுபடுத்தியும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிட்டும் அவர்களை இயங்கவைக்க முடியவில்லை. மதுரை எய்ம்ஸ்சோடு இணைந்து அறிவிக்கப்பட்ட ஜம்மு, மங்களகிரி, பீபீ குளம் எம்ய்ம்ஸ்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் மதுரை எய்ம்ஸ் இன்னும் தொடக்கப்பணியே நடக்காமல் அப்படியே நிற்கிறது.
மாநில அரசின் பொறுப்பின்மையின் உச்சமென இவற்றைச் சொல்லலாம். மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தொடங்க 300 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையையும் கட்டிடங்களையும் கொடுத்துப் பணிகளை விரைவுபடுத்த வேண்டிய பொறுப்புக்கொண்ட மாநில அரசு இதனைப்பற்றி துளியளவும் கண்டுகொள்வதில்லை. மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கான சிறப்பு அலுவலரை நியமியுங்கள் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம்; அதனை நிறைவேற்ற மறுக்கிறது.
கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரிடமோ, சுகாதாரத்துறை அமைச்சரிடமோ, நிதியமைச்சரிடமோ இதனைப்பற்றி ஒரு வார்த்தை பேசியதாகத் தெரியவில்லை. தமிழகத்துக்கு வர இருக்கிற முதல் எய்ம்ஸ், அதுவும் குறிப்பாக தென்தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும்பலனைக் கொடுக்க உள்ள மிகப்பெரிய திட்டம் பற்றி மாநில முதலமைச்சருக்கு சிறிதாவது அக்கறை வேண்டாமா? எட்டுவழிச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தக் காட்டிய வேகத்திலும் முனைப்பிலும் பத்தில் ஒரு பகுதியாவது மதுரை எய்ம்ஸ்க்குக் காட்டியிருந்தால் இந்நேரம் எய்ம்ஸ்கான பணி பலமடங்கு முன்னேறியிருக்கும்.
மத்திய அரசின் அதிகாரிகளோ, மாநில அரசின் ஒத்துழைப்பின்மையை காரணமாகச்சொல்லி பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கப்பார்க்கிறார்கள். பிரதமர் அடிக்கல்நாட்டி இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையிலும் தார்மீக ரீதியாக தனக்குள்ள பொறுப்பினை நிறைவேற்ற மறுக்கிறது மத்திய அரசு. கடந்த ஜூன் மாதம் கையெழுத்தாக வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகமலேயே காலம் சென்றுகொண்டிருக்கிறது.
இனியும் காலந்தாழ்த்தாமல் மத்திய அமைச்சரவை எய்ம்ஸ்க்கான திட்டமதிப்பீட்டு உயர்வுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். மார்ச்சுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவேண்டும். வரும் கல்வியாண்டிலாவது மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும். மாநில அரசு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். இவை எல்லாம் நமக்கு முன்னால் இருக்கும் உடனடிப்பணிகள்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எய்ம்ஸ் பிரச்சனையை முதன்மைப் பிரச்சனைகளில் ஒன்றாக எழுப்ப உள்ளோம். மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், வர்த்தக, தொழில் துறை அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் என அனைவரும் இக்கோரிக்கைகளின்பால் அழுத்தம் கொடுத்து மார்ச்சு மாதத்தில் பல்வேறு வகையான இயக்கங்களை நடத்த முன்வரவேண்டும். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலத்தில் நாம் கொடுக்கும் அழுத்தந்தான் இத்திட்டத்துக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதலைப் பெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வழிவகுக்கும். இந்தக் காலத்தை நாம் தவறவிட்டால் நெடுநாள் காத்திருக்க வேண்டிய நிலையிருக்கும்.