தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பல்வேறு தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஆளும் அ.தி.மு.க-வில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டு, கட்சிக் குழப்பங்களோடு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகவும் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து வந்தாலும் அவர்களிடையே மறைமுகமான ஒரு பனிப்போர் தொடர்ந்து இருந்து வருவதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுஒருபக்கம் என்றால், அ.தி.மு.கவின் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என பலரின் பேச்சின் மூலம் அக்கட்சியின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியிருப்பது உறுதியானது. குறிப்பாக நேற்றையதினம் அமைச்சர் மாஃபா.பாண்டிய ராஜனை கண்டித்து அ.தி.மு.கவினரே ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் மாஃபா.பாண்டியராஜன். இவர் அ.தி.மு.க அரசில் தமிழ்வளர்ச்சி துறை அமைச்சராக உள்ளார். இந்நினிலையில் இவர் 10 மேற்பட்ட உதவியாளர்களை வைத்துக்கொண்டு ஆவடி மாநகராட்சியில் கொரோனாவை பயன்படுத்தி சுமார் 100 கோடி வரை முறைகேடு செய்துள்ளதாக ஆதாரங்களுடன் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், 5 ஆண்டுகளாக ஆவடி மாநகராட்சியில் எந்தவிதமான நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படாததாலும், உள்ளூர் அ.தி.மு.கவினரை மதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதானல் ஆத்திரமடைந்த ஆவடி அ.தி.மு.கவினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாண்டியராஜனை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது அவர்கள். “ஆவடியை காப்பாற்று; ஆவடியை சுரண்டிய பாண்டியராஜன் ஒழிக” என முழக்கங்கள் எழுப்பினர். அ.தி.மு.கவினரே அமைச்சர் பாண்டியராஜனை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.