மனித சமூகம் வாழும் இந்த இவ்வுலகில்தான் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. ஆனால், இந்த உலகம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல இறுமாப்புடன் பிற உயிரினங்களுக்கு எண்ணிலடங்கா தீமைகளை மனித சமூகம் நிகழ்த்தி வருகிறது.
காலநிலை மாற்றம், காடுகள் அழிப்பு, இயற்கை வளங்களை சூறையாடுவதன் மூலம் பல அறியவகை உயிரினங்களின் இனம் இந்த பூமியிலே இல்லாத நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில் வனவிலங்கு உள்ளிட்ட உயிரினங்களை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் என பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
குறிப்பாக, அழிந்துவரும் ‘ஆலிவ் ரிட்லி’ ஆமைகளை பாதுகாக்க உலகின் பல்வேறு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மிகப்பழமையான ஆலிவ் ரிட்லி என்ற கடல் வகை ஆமைகளைப் பாதுகாக்க வனத்துறையினர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வமானது ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள்தான். உலகிலேயே அதிகமாக காணப்படும் ஆமை இனமும் ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள்தான். இந்த வகை ஆமை இனங்கள் இந்திய ஆழ்கடல் பகுதிகளில் வாழக்கக்கூடியவை.
இந்த அறிய வகை ஆமை இனம், ஆண்டுதோறும் நம் அருகே இருக்கும் கடற்கரைகளில் வந்து முட்டையிட்டுச் செல்லும். கடலிலிருந்து நூறு மீட்டர் வரை நிலப்பரப்பு பகுதிக்கு வந்து முட்டையிடுகின்றன. குறிப்பாக, ஆலிவ் ரிட்லி ஆமைகள் சென்னை, புதுச்சேரி, மற்றும் கடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்களில் முட்டையிட வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
அதுவும் 2 முதல் 3 அடிகள் வரை மணலில் குழிகளைத் தோண்டி அவை முட்டையிடும். மேலும் இந்த ஆமை சுமார் 110 முதல் 140 முட்டைகள் இடுவதாகவும், சில நேரங்களில் ஆமைகள் தனது பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில், சில இடங்களில் போலியாக குழியை மட்டும் தோண்டிவிட்டு, முட்டையிடாமல் சென்றுவிடும்.
இந்நிலையில், ஆலிவ் ரிட்லி ஆமைகள் அழிந்து வரும் நிலையில், அவற்றைப் பாதுகாக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முட்டைகளை, வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறையினர், உள்ளூர் இளைஞர்களின் துணையுடன் சேகரித்து வைத்து பாதுகாத்து, குஞ்சு பொறித்தவுடன் பத்திரமாக மீண்டும் கடலில் விட்டு பணியை மேற்க்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்தாண்டு ஆமைகள் முட்டையிடத் துவங்கிய நிலையில், புதுச்சேரி வனத்துறை அதிகாரி வஞ்சுளவல்லி தலைமையிலான ஊழியர்கள் கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், கடற்கரை பகுதியில் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேப்போன்று புதுச்சேரி கடற்கரையோரப் பகுதிகளில் கடந்தாண்டு 10,100 ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.