நீலகிரியில் ஒற்றை யானைக்கு தீ வைத்த உரிமையாளர் நடத்தி வந்த தனியார் தங்கும் விடுதிக்கு எந்தவித ஆவணம் மற்றும் உரிமம் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பெயரில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மசினகுடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சீல் வைத்து இழுத்து மூடினர்.
கூடலூரை அடுத்துள்ள மசினகுடி, சிங்காரா பகுதியில் கடந்த இரண்டு மூன்று மாதகாலமாக முதுகில் காயத்துடன் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று சுற்றி வந்தது. இந்த நிலையில் அந்த யானைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த நிலையில், அந்த யானை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக அளவில் நடந்தது.
கடந்த 15 ஆம் தேதி அன்று அந்த யானைக்கு காது கிழிந்தவாறு ரத்தம் சொட்டியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க மயக்க ஊசி செலுத்தி முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு அதன்படி, அந்த யானை லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை முகாம் வரும் நிலையில், வரும் வழியிலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இதனை அடுத்து பிரேத பரிசோதனையில் காது பெட்ரோல் ஊற்றப்பட்டு தீக்காயங்கள் ஏற்பட்டதால் யானை இறந்தது தெரியவந்தது இந்நிலையில் வனத்துறையினருக்கு ரகசிய ஒளிப்பதிவு காட்சி கிடைத்த நிலையை அதனை வைத்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சமூக விரோதிகளை கண்டறிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி மாவனல்லா பகுதியில் தனியார் தங்கும் விடுதி வைத்திருந்த ரேமண்ட், பிரசாத் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்த நிலையில், நிக்கிராயன் என்பவரை போலிஸார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஒற்றை யானைக்கு தீ வைத்த உரிமையாளர் நடத்தி வந்த தனியார் தங்கும் விடுதிக்கு எந்தவித ஆவணம் மற்றும் உரிமம் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பெயரில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இரவோடு இரவாக மசினகுடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சீல் வைத்து இழுத்து மூடினர்.
முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழிவின் பட்டியலிலுள்ள நான்கு செந்நாய்கள், இரு குட்டிகளை ஈன்ற புலி போன்ற வனவிலங்குகளை விஷம் வைத்து கொன்ற நிலையில், இன்று யானையை உயிரோட தீயிட்டு எரிக்க மேற்கொண்ட முயற்சி இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.