கூடலூரை அடுத்துள்ள மசினகுடி, சிங்காரா பகுதியில் கடந்த இரண்டு மூன்று மாதகாலமாக முதுகில் காயத்துடன் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று சுற்றி வந்தது.
இந்த நிலையில், அந்த யானைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், அந்த யானை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக அளவில் நடந்து திரிந்தது. கடந்த 15ம் தேதி அன்று அந்த யானையின் காது கிழிந்து ரத்தம் சொட்டியது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க மயக்க ஊசி செலுத்தி, முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு, அதன்படி அந்த யானை லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை முகாம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதனையடுத்து பிரேத பரிசோதனையில் காதில் பெட்ரோல் ஊற்றப்பட்டு எரிந்து தீக்காயம் ஏற்பட்டதால் யானை இறந்தது தெரியவந்தது. இந்நிலையில், வனத்துறையினருக்கு ரகசிய ஒளிப்பதிவு காட்சி கிடைத்ததை வைத்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதன்படி, மாவனல்லா பகுதியில் தனியார் தங்கும் விடுதி வைத்திருந்த ரைமன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக பிரகாஷ் என்பவரையும் பிடித்து வனத்துறையினர் ரகசிய இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானையை பெட்ரோல் மூலம் கொடூரமாக தாக்கிய வீடியோ ஒளிப்பதிவு தற்போது இங்கு உள்ள மக்கள் மற்றும் வனத்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தது மட்டுமல்லாமல், அந்த வீடியோவில், “அவ்வளவுதான். உள்ளே போய் எரிந்து சாவு” என்று சொல்வது தெளிவாக கேட்கிறது. எனவே இந்த சம்பங்களில் ஈடுபட்ட ரிசார்ட் உரிமையாளர் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.