நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் உள் மண்டலம், வெளி மண்டலம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள் மண்டலம் வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். வெளி மண்டல வனப்பகுதி மக்கள் வாழும் கிராமங்கள், வனப்பகுதி ஒன்றிணைந்த பகுதியாகவும் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வெளி மண்டல வனப் பகுதியில் வனத்துறை - பொதுமக்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவது சம்பந்தமாக கிராம மக்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் வனத்துறை மீது இருந்து வரும் சூழ்நிலையில், யானை வழித்தடம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றும் முயற்சியில் வனத்துறை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிலர் வன குற்றங்களில் ஈடுபட தொடங்கி உள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பு அரியவகை விலங்கான செந்நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் இரு குட்டிகளை ஈன்ற புலிக்கு விஷம் வைத்துக் கொன்றனர்.
தற்போது உலகையே அதிர வைக்கும் அளவிற்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையை உயிருடன் எரிக்கும் அளவிற்கு வனக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் வனப்பகுதியில் மர்ம நபர்களால் காட்டுத் தீயும் மூட்டப்படுகிறது.
இதுகுறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் வனத்துறையினர் - கிராம மக்களிடையே பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருவதும், அப்பகுதியில் ஜீப் ஓட்டுனர்கள் வாழ்வாதாரத்தை வனத்துறையினர் முழுமையாக முடக்கி உள்ளதால் நூற்றுக்கணக்கான ஜீப் ஓட்டுனர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எனவே எதிர்காலத்தில் மாவட்ட நிர்வாகம் முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள மசினகுடி, மாவாநள்ளா, வாழைத்தோட்டம் போன்ற பல கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் வனத்துறையினரிடம் ஏற்படுத்தியுள்ள மோதலை மாவட்ட நிர்வாகம் குழுக்கள் அமைத்து உடனடியாக இயற்கை செல்வமான வனத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே 40 ஆண்டு காலமாக மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த SI என்ற ஆண் யானை காது எரிக்கப்பட்டு பலியான நிலையில், யானையை கண்காணித்து வந்த பழங்குடியின வேட்டை தடுப்பு காவலர் பெள்ளன் இறந்த யானையின் தும்பிக்கையை பிடித்து அழும் காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது.
இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பத்தில் மிகமுக்கிய பங்காற்றும் யானைகளின் மரணம் குறித்து இந்த அரசாங்கத்திற்கு கவலை இல்லையா என வன விலங்கு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் வனத்துறை அமைச்சராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் இதுபற்றி எதுவும் பேசாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்துவதாக தம்பட்டம் அடிக்கும் அ.தி.மு.க அரசு, யானைகளை பாதுகாப்பதிலும் வனங்களை பாதுகாப்பதிலும் எந்த வித அக்கறையும் காட்டவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.