மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்தும் - வீணடித்தும் இந்திய தேர்தல் ஆணைய நெறிமுறைகளுக்கு எதிராக அ.தி.மு.கவின் துணை ஒருங்கிணைப்பாளரும் - முதலமைச்சருமான பழனிச்சாமியை முன்னிலைப்படுத்தி தொலைக்காட்சிகளிலும் - பத்திரிகைகளிலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வின் மீதும் அதற்கு துணை போகும் தமிழக அரசு அலுவலர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில், “இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பினை பின்பற்றி, டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் கட்சியின் சின்னத்தையோ தங்களுடைய அரசியல் கட்சியின் தலைவர்களையோ முன்னிலைப்படுத்தி அல்லது அவர்களை பிரபலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலை பாதிக்கின்ற வகையில், மக்கள் பணத்தை பயன்படுத்தி விளம்பரப் படுத்தக் கூடாது என்றும்; அவ்வாறு விளம்பர படுத்தினால் அந்த அரசியல் கட்சி மீது, அரசியல் கட்சியின் சின்னங்களுக்கான விதிமுறைகளின் (Election Symbols (Reservation &Allotment) Order, 1968) கீழ் அந்த அரசியல் கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் 7.10.2016ஆம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது.
அந்தக் கடிதத்தில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பினை குறிப்பிட்டு அந்த தீர்ப்பின் அடிப்படையில், கீழ்க்காணுமாறு கூறப்பட்டுள்ளது:
எந்த ஒரு அரசியல் கட்சியும் பொதுமக்கள் பணத்தை பயன்படுத்தி அந்த அரசியல் கட்சியையோ அல்லது அந்த அரசியல் கட்சியின் சின்னத்தையோ விளம்பரப்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது என்றும்; இந்த விதிமுறைக்கு முரணாக எந்த அரசியல் கட்சியாவது செயல்பட்டால் அது தேர்தல் சின்னம் ஒதுக்கீடு விதிமுறைகளை மீறியதாக கருதப்பட்டு அந்த அரசியல் கட்சியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“4. Accordingly, the Commission has directed that no political party shall henceforth either use or allow the use of any public funds or public place or government machinery for carrying out any activity that would amount to advertisement for the party or propagating the election symbol allotted to the Party.
5. It is clarified that any violation of the above directions would be treated as violation of a lawful direction of the Commission within the meaning of paragraph 16A of the Election Symbols (Reservation &Allotment) Order, 1968.”
2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்று, ஜெ.ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தது.
அவரது இறப்பிற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்திருந்த நிலையில் சசிகலாவின் துணையுடன் எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார். இவர் ஆளும் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.கவின் வெற்றி என்பது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவிற்கு தான். அவரது இறப்பை தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவின் உதவியுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.
கட்சியினரிடையேயும் பொதுமக்கள் இடையேயும் அவ்வளவாக பிரபலமாகாத எடப்பாடி பழனிச்சாமி, பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்த, கடந்த 28.12.2020ஆம் தேதியன்று, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அ.தி.மு.க கட்சியின் கூட்டத்தில், வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அ.தி.மு.கவின் பிரச்சாரம் “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற பெயரில் அமையும் என்று குறிப்பிட்டார். இது தந்தி டிவியில் ஒளிபரப்பாகி உள்ளது.
அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க கட்சியின் சார்பில் 60 வினாடிகள் ஓடுகின்ற வகையில் உள்ள ஒரு விளம்பரத்தை எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முன்னிலைப்படுத்தி வெளியிடப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் என்ற தனது அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு சண்முகம் அவர்களின் உதவியுடன் கிரையான் நெட்வொர்க்கை சேர்ந்த கிரையான் கம்யூனிகேஷன்ஸ் (M/s Crayon communications) என்ற ஒரு விளம்பரதாரர் நிறுவனத்தின் மூலமாக இந்த விளம்பரங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விளம்பர நிறுவனம் மூலமாக தமிழ்நாடு அரசு, அ.தி.மு.க கட்சியின் சார்பாக தயாரிக்கப்பட்ட 60 வினாடிகள் ஓடுகின்ற விளம்பரத்தை வெளியிட்டு வருகிறது. இதில்லாமல் இன்னும் பல விளம்பரங்களை வெளியிடுவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.
விளம்பரங்களை டிஜிட்டல் மீடியாக்கள் மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிடிஎச் (DTH) மூலமாகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகள் மூலமாகவும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை மக்கள் வரிப்பணத்தை அ.தி.மு.கவின் தேர்தல் லாபத்திற்காகவும் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக முன்னிலை படுத்துவதற்காகவும் வீணாகச் செலவிட்டு வருகின்றனர். இது தமிழ்நாடு அரசின் பணத்தை கையாடல் செய்வது ஆகும்.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை மீறி ஆளும் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முன்னிலைப்படுத்தி; வாக்காளர்களிடம் அவரை பிரபலப்படுத்தி; வரும் தேர்தலில் அவரை முதலமைச்சர் வேட்பாளராக உருவாக்கி அ.தி.மு.கவிற்கு தேர்தல் லாபம் கிடைக்கின்ற வகையில் அரசின் பணத்தையும், அதிகாரத்தையும் அதிமுகவும் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் பயன்படுத்தி வருகின்றனர்
தமிழ்நாடு அரசின் மூலமாக வெளியிடப்பட்டிருக்கும், அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும், 60 நொடிகள் ஓடுகின்ற, அந்த வீடியோ விளம்பரத்தில் தமிழ்நாடு அரசின் சின்னமும் இடம்பெற்றிருக்கிறது. அதேநேரத்தில் அதில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை போற்றுகின்ற வகையில் ஒரு பாடலும் இடம் பெற்றிருக்கிறது. அந்த விளம்பர வீடியோவில் ஒருவர் ஆளும் அ.தி.மு.க கட்சி வண்ணத்தைக் கொண்ட வேட்டியை அணிந்திருக்கிறார். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகளைக் கட்டிக்கொண்டு அ.தி.மு.க கட்சி வண்ணத்தைக் கொண்ட வேட்டி சட்டையில் வருகிறார். தமிழ்நாடு அரசின் சின்னத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த விளம்பரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். இவையெல்லாம் தமிழ்நாடு அரசின் பணத்திலும்; மக்களின் வரிப்பணத்திலும் வெளியிடப்பட்டு இருப்பதாகும்.
இந்த விளம்பரங்கள் அனைத்தும் தனியார் தொலைக்காட்சிகளில் தினமும் வெளியிடப்பட்டு கொண்டிருக்கின்றன. அதேபோல இந்த தொலைக்காட்சி Youtube சேனலிலும் எப்பொழுதும் அனைவரும் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவைகளை தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளிலும் ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இவை மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் முழுப்பக்க அளவில் விளம்பரங்கள் தமிழ்நாடு அரசின் மூலமாக இதேபோன்று வெளியிடப்பட்டு வருகின்றன. வாரப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் செலவில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பெரிய தலைவராக முன்னிறுத்தி இந்த விளம்பரங்கள் அரசின் செலவில் கொடுக்கப்பட்டு வருகின்றன.
மக்களின் வரிப்பணத்தை பொது நோக்கத்திற்காகத் தான் செயல்பட வேண்டுமே தவிர, தனிநபர்க்காகவோ, ஆளும் அரசியல் கட்சிக்காகவோ செலவிடக்கூடாது. மக்கள் நலனுக்காக மட்டும் தான் அந்த பணம் செலவிடப்பட வேண்டும். ஆனால் அவற்றை எல்லாம் மீறி அ.தி.மு.கவும், இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் தன்னையும் தன்னுடைய கட்சியையும் முன்னிறுத்திக் கொள்ளவும்; விளம்பரப்படுத்திக் கொள்ளவும்; மேம்படுத்திக் கொள்ளவும், அதனை வருகின்ற பொதுத்தேர்தலில் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளவும் விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மக்களின் வரிப்பணத்தை தனிநபரின் நலனுக்காகவும் அரசியல் கட்சியின் நலனுக்காகவும் பயன்படுத்துவதை நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை.
இந்திய தேர்தல் ஆணையம் 07.10.2016ஆம் தேதியன்று வெளியிட்டிருக்கின்ற விதிமுறைகளின்படி இவைகள் அனுமதிக்கப்பட கூடாது. ஏற்கனவே கடந்த 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு சுமார் 4.56 லட்சம் கோடி கடனில் இருக்கின்ற சூழ்நிலையில், அதனை இன்னும் கூட்டுகின்ற வகையில் சுமார் ஆயிரம் கோடி செலவில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஆகவே இந்திய தேர்தல் ஆணையம் 07.10.2016ஆம் தேதியன்று வெளியிட்டிருக்கின்ற விதிமுறைகளின்படி அ.தி.மு.கவின் மீதும்; அதன் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்ட சரத்து 324ன் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தேர்தல் ஆணையம், இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடாமல் உடனே நிறுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
நியாயமான, நேர்மையான, அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான முறையில் வாய்ப்பளிக்கும் முறையில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் தேர்தலை நடத்த உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இதுவரை தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கான செலவுத் தொகை குறித்த முழு விபரத்தையும் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு; அதுகுறித்து விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் அரசு பணத்தை தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்திய ஆளும் அ.தி.மு.கவின் மீதும்; அதற்கு துணை போன தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கோரிக்கை வைத்துள்ளார்.