அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2013ம் ஆண்டு முதல் தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் அதே கட்டணத் தொகையை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
மாணவர்களின் அறவழிப் போராட்டத்தையடுத்து மருத்துவக் கல்லூரி மறு தேதி குறிப்பிடாமல் காலவரையற்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராடிய மாணவர்களை அழைத்துப் பேசாமல் கல்லூரியை மூடும் அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக, தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு:
“சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அதிக அளவில் கல்விக்கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, 43 நாட்களாக மாணவ மாணவியர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் - இன்று திடீரென்று மாலை 4 மணிக்குள் அனைத்து மாணவர்களும் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இது குறித்து நான் ஏற்கனவே கோரிக்கை விடுத்தும், அது இந்த ஆட்சியின் காதுகளில் விழவில்லை என்பது வேதனைக்குரியது.
"அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிய கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும்" என்ற மாணவர்கள் கோரிக்கை நியாயமானது. அதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி கவலையே படவில்லை. போராடிய மாணவர்களை அழைத்துப் பேசவும் இல்லை. மாணவர்களின் போராட்டத்திற்குத் தீர்வு காண அக்கறை இல்லாத அ.தி.மு.க அரசு, இப்போது திடீரென்று மாணவ மாணவியரை வெளியேற்றும் உத்தரவைப் பிறப்பித்திருப்பது அராஜகமானது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மாணவ மாணவியர் எப்படி திடீரென்று வெளியேறுவார்கள்? அவர்கள் பத்திரமாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு யார் பொறுப்பு? எனவே, மாணவிகளின் பாதுகாப்பு கருதி, விடுதியை மூடும் முடிவைக் கைவிட்டு- போராடும் மாணவர்களை அழைத்துப் பேசி அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை மட்டுமே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.