அண்மைக்காலமாக இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அதில் நன்மைகளை விட வதந்திகளும், பொய் பிரசாரங்களும், கலாசார சீர்கேடுகளும் அதிகம் உலாவருவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பிலும் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
அதிலும் யூடியூப் சேனல் நடத்தி வரும் பலர் இளைஞர்கள், பெண்களிடத்தில் மக்கள் கருத்து என்ற பேரில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும், பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இரட்டை அர்த்தங்கள் நிறைந்த கேள்விகள் கேட்பது என பல வகையில் தரம் தாழ்ந்து செயல்படுவது காண்போருக்கு முகச் சுழிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இப்படி இருக்கையில், Chennai talks என்ற யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் இளம் பெண்களிடம் 2020ம் ஆண்டு எப்படி போனது என்று கேட்டு பேட்டி எடுத்திருக்கிறார்கள். அதில், ஒரு சிலரிடம் மிகவும் ஆபாசமாக பேசியதும் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பெசன்ட் நகரைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் மேற்குறிப்பிட்ட யூடியூப் சேனல் குழுவினர் மீது சாஸ்திரி நகர் போலிஸாரிடம் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரை அடுத்து, அந்த யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் குமார், தொகுப்பாளர் அசன் பாட்சா, மற்றும் ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகிய மூவரை கைது செய்தனர்.
மூவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், பெண்களை அவமதித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில சேனல்களிலும் அடிக்கடி இதுபோன்ற ஆபாச காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து புகார் வந்துள்ளதாகவும், அவர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.