மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அவனியாபுரத்தில் வருகிற 14-ம் தேதியும், பாலமேட்டில் 15-ம் தேதியும், அலங்காநல்லுரில் 16-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 50 சதவீத பார்வையாளர்கள் மற்றும் 300 மாடுபிடிவீரர்கள் மட்டுமே இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன. போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது. இதில், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை நடந்தப்பட்டது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளின் உரிமையாளர்கள் இன்று பதிவு செய்து அதற்கான டோக்கன்களை பெற்றனர். காலை இந்த பணி தொடங்கியதுடன் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடைபெற்றது.
இன்று ஒரே நாளில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள் பதிவு நடைபெறுவதால், காளை உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதேபோல, மாடுபிடி வீரர்களும் நீண்டவரிசையில் நின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அவ்வப்போது போலிஸார் தடியடி நடத்தினர் இதனால் ஏராளமானோர் காயமடைந்தனர்
காளை உரிமையாளர்கள் டோக்கன் வழங்குவதில் பெரும் குளறுபடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டினர். நேற்று இரவு முதல் காத்திருந்தவர்கள் வரிசையில் நின்று உள்ளே சென்ற பொழுது 200வது வரிசையிலிருந்து டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணம் உள்ளவர்களுக்கும் ஆளுங்கட்சியினறுக்கும் காளையனுக்கு டோக்கன் வழங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
சாமானிய ஏழை எளிய மக்களின் காளைகளை அவிழ்த்து விடுவது சிரமமாக உள்ளதாகவும், பல ஆண்டுகளாக காளைகளை களத்தில் இறக்கும் பெண்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த சிரமத்துடன் டோக்கன் பெற்றுச் செல்வதாகவும் தங்கள் காளை டோக்கன் பெற்றாலும் போட்டியில் அனுமதிக்கப் படுமா என்று சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.