சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் அப்துல் சமது, மாநில பொருளாளர் கோவை உமர் உள்ளிட்டோர் இன்று சந்தித்துப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜவாஹிருல்லா பேசுகையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவேண்டிய முக்கிய அம்சங்களை தி.மு.க தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக அளித்தோம்.
இன்றைய காலகட்டத்தில் சமூகநீதியும், சமூக நல்லிணக்கமும் தழைத்தோங்க வேண்டும்; மாநிலங்களின் உரிமை காக்கப்பட வேண்டும். மத்தியில் இருக்கக்கூடிய பா.ஜ.க அரசு இந்த மூன்று அம்சங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.
மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடிய இடத்தில் பா.ஜ.க அரசும் அதற்கு ஒத்துப்போகின்ற இடத்தில் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசும் உள்ளது.
அஞ்சல் துறையில் கணக்கர் பணிக்கு நடைபெறவுள்ள தேர்வு இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே நடைபெறும் என அறிவித்திருப்பது நாள்தோறும் தமிழர்களின் உரிமையைப் பறித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் 3.5% அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படாமல் ஏராளமான பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில் சிறப்பு நியமன முகாம் நடத்தப்பட வேண்டும்.
தி.மு.க கூட்டணியில் வேறு இஸ்லாமிய அமைப்புகள் இணைந்தாலும் எங்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை. தி.மு.க தலைவர் கூட்டணி நலன் குறித்து எடுக்கக்கூடிய எந்த முடிவுகளுக்கும் நாங்கள் ஆதரவாக இருப்போம்.” எனத் தெரிவித்தார்.