மதுரை - சென்னைக்கு இடையில் இயங்கும் தேஜஸ் விரைவு வண்டிகளை ஜனவரி 4ம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக கடந்த வாரம் ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ரயில்வே நிர்வாகத்தின் இத்தகனைய முடிவுக்கு அரசியல் கட்சியினர் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, தேஜாஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும் எனக் கேட்டு மத்திய ரயில்வேதுறை அமைச்சருக்கு மதுரை மக்களை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில், “மதுரை - சென்னைக்கு இடையில் இயங்கும் தேஜஸ் விரைவு வண்டிகளை ஜனவரி 4 ஆம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம்.
இதனை வன்மையாக கண்டிக்கிறேன். குறைவான பயணிகள் வருகை இருந்ததால் ரத்து செய்வகிறோம் என காரணம் கூறியுள்ளது தெற்கு ரயில்வே. இது ஏற்கக்கூடியதல்ல. சேவைத்துறையான ரயில்வே இதுவரை பின்பற்றி வந்த கொள்கையிலிருந்து பின்வாங்கி லாபத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது ஏற்கக்கூடியது அல்ல.
கொள்ளைநோய் காலத்தில் அவசர காரணங்களுக்கு பயணம் செய்யும் சாதாரண மக்களை கருத்தில் கொண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ்களை ரத்து செய்வதை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதைப்போல கோவை பெங்களூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் களையும் மீண்டும் இயக்க வேண்டும். இதே காரணத்துக்காக பயணிகள் ரயிலை தனியாருக்கு விடுவதை கை விடவும் கோருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மதுரை எம்.பி. சு வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று சென்னை - மதுரை இடையேயான தேஜஸ் ரயில் நிறுத்தப்படும் என்ற முடிவை திரும்பப் பெற்ற மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜனவரி 10 முதல் மதுரை - சென்னை இடையே தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நன்றித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மக்களின் குரலுக்கு மாபெரும் வெற்றி. சென்னை மதுரையிடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் நிறுத்தப்படும் என்ற முடிவினை கைவிட கடந்த வாரம் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். வரும் 10 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சருக்கு எனது நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.