தமிழ்நாடு

பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல்: எல்லையோர மாவட்டங்களில் பலத்த சோதனை- மனிதர்களுக்கு தொற்றலாம் என எச்சரிக்கை!

கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் வரலாம் என தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல்: எல்லையோர மாவட்டங்களில் பலத்த சோதனை- மனிதர்களுக்கு தொற்றலாம் என எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கேரளா, ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்த வாத்துகளை பரிசோதித்ததில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. அதன் எதிரொலியாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேரளாவிலிருந்து பறவைகள் கொண்டுவர தடை விதித்துள்ளது.

கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் வழியில் கீழ் நாடுகாணி, தாளூர், எருமாடு, பாட்டவயல், காக்கநள்ளா போன்ற சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறை மற்றும் கால்நடை துறையினர் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்து முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்திய பிறகே நீலகிரியில் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக, இன்று சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், “கேரளா, ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இக்காய்ச்சல் கால்நடைகளைப் பாதித்தாலும் மனிதர்களுக்கும் வரலாம்.

கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய கேரள எல்லையோர மாவட்டங்களில் 26 செக்போஸ்ட்டுகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories