தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒன்றான தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டத்தை கொண்டுவர மத்திய பா.ஜ.க அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய அ.தி.மு.கவையும் பயன்படுத்தி வருகிறது.
நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் தொன்மைவாய்ந்த கடின பாறைகள் நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலை கடுமையான சுற்றுப்புற சீர்கேட்டிற்கு ஆளாகும் எனப் பல இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ள தமிழக பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தத் திட்டம் வரக்கூடிய தேனி பொட்டிபுரத்தை ஒட்டியுள்ள உடும்பஞ்சோலை வனப்பகுதியில் உள்ள மதிகெட்டான் சோலை 1,286 ஹெட்டர் வனப்பகுதி. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி.
இங்கு தொழில் நிறுவனங்கள் கொண்டு வருவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான மதிகெட்டான் சோலை பகுதியை மேலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் தமிழகத்தில் வரக்கூடிய இந்த வனப்பகுதி ஆனது பாதுகாக்கப்பட்ட பகுதி அல்ல என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்தப் பகுதியில் தான் தற்போது நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.