கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கூடலூரில் புதிதாக அமைக்கப்படும் பேருந்து நிலையம் புதிய கட்டிடத்திற்கு அ.தி.மு.கவினர் அரசு அதிகாரிகள் துணையுடன் பூமி பூஜை செய்வதற்கு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியானது தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாகும். இந்தப் பகுதியில் மூன்று மாநில மக்கள் பேருந்துகள் மூலம் வந்து செல்லும் நிலையில் கூடலூர் பேருந்து நிலையத்தில் இடவசதி இல்லாத காரணத்தால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி தனது தொகுதி நிதியிலிருந்து 50 லட்சமும், மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து 25 லட்சம் நிதி பெற்று மொத்தம் 75 லட்சம் செலவில் கூடலூர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணியைத் தொடக்கி வைத்தார்.
தற்போது கூடலூர் புதிய பேருந்து நிலைய விரிவாக்கப் பணி நடைபெற உள்ள நிலையில் அரசியல் லாபத்திற்காக கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கூடலூர் மர வியாபாரியும், அ.தி.மு.க மாநில வர்த்தக அணி அமைப்பாளருமான சஜீவன் அரசு அதிகாரிகளை மிரட்டி தற்போது புதிய பேருந்து நிலையத்திற்கு பூமி பூஜை செய்வது கேலிக்கூத்தாக இருப்பதாக கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி அளித்த அவர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் கூடலூர் பேருந்து நிலைய விரிவாக்க திட்டத்திற்கு சம்பந்தமில்லாமல் அ.தி.மு.கவினர் பூமிபூஜை மேற்கொள்வது கேலிக்கூத்தாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.