தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரசார பயணத்திட்டத்தின்படி, தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களைச் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரைப் பயணம் மேற்கொண்டார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
அரியலூர் புறவழிச்சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தி.மு.க மாவட்ட அலுவலகத்தைத் திறந்துவைத்த உதயநிதி ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் சிலையைத் திறந்துவைத்துக் கொடி ஏற்றினார்.
பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையத்திற்கு எதிரேயுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது செயல்படாத ஆட்சியை நடத்துகிறார். தன்னை அமைச்சராக்கிய ஜெயலலிதாவுக்கும், முதல்வராக்கிய சசிகலாவுக்கும் உண்மையாக இல்லாதவர் பழனிசாமி.
நெடுஞ்சாலைத்துறையின் 6,000 கோடி ரூபாய் டெண்டரை தனது சம்பந்திக்கு கொடுத்துள்ளார் பழனிசாமி. அப்பணத்தை தனது சம்பந்தி மூலம் தனது பாக்கெட்டுக்கு கொண்டு வந்து ஊழல் ஆட்சி நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியை விமர்சித்ததற்காக என் மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயார்.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, மறைந்த முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ ஆறுமுகம் வீட்டுக்குச் சென்று அவரது திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின், பின்னர் வணிகர்கள், சிறுவியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களின் பிரச்னைகள் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.