தமிழ்நாடு

“கொரோனா தொற்றை காரணம் காட்டியே பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது அ.தி.மு.க” - துரைமுருகன் சாடல்!

10 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சி செய்தது. தற்போது, தமிழகத்தின் கடன் பாக்கி ரூ.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதுதான் அவர்கள் செய்த சாதனை

“கொரோனா தொற்றை காரணம் காட்டியே பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது அ.தி.மு.க” - துரைமுருகன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க அரசு பொங்கல் பரிசாக ரூ.2,500 அறிவித்துள்ளதால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் 16,000க்கும் மேற்பட்ட இடங்களில் ‘அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படும் தி.மு.க மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று முதல் தி.மு.க சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் தி.மு.க சார்பில் பல்வேறு ஊராட்சிகளில் இன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மேல்பட்டி ஊராட்சியில், நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ தலைமை வகித்து பொதுமக்களிடையே கலந்துரையாடினார்.

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில், “குடியாத்தம் தொகுதிக்கு தற்போது எம்.எல்.ஏ இல்லாததால் இங்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் இந்த தொகுதியை தத்தெடுத்து, பொதுமக்களுக்கு செய்யவேண்டிய பணிகளைச் செய்ய தி.மு.க பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் அவருக்கு அறிவுறுத்துகிறேன்.

தி.மு.க ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை குறையில்லாமல் செய்து முடிப்போம். தி.மு.க ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் பாக்கி இருந்தது. அதன் பிறகு, 10 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சி செய்தது. தற்போது, தமிழகத்தின் கடன் பாக்கி ரூ.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதுதான் அவர்கள் செய்த சாதனை.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகியுள்ளது. அ.தி.மு.க செய்த ஊழல் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் முறையிட்டுள்ளோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரை நேரில் சந்தித்தும் அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வழங்கியுள்ளோம்.

கொரோனா தொற்றை காரணம் காட்டி பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு மக்களுக்காக வழங்கிய கூடுதல் அரிசியை கூட அ.தி.மு.கவினர் விட்டுவைக்கவில்லை. அரிசியிலும் மெகா ஊழல் நடந்துள்ளது.

கொரோனா ஊரடங்கின்போது மக்கள் வேலையில்லாமல் கஷ்டப்பட்டபோது ரூ.1,000 மட்டுமே வழங்கிய அ.தி.மு.க அரசு தற்போது தேர்தல் வருவதால் பொங்கல் பரிசாக ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.2,500-ஐ வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கெல்லாம் மக்கள் ஏமாறமாட்டார்கள்.

அ.தி.மு.க அரசை விரட்டியடிக்கும் காலம் வந்துவிட்டது. தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் ‘அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்’ என்ற முழக்கத்தோடு கிராம சபைக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிராம சபைக்கூட்டம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories