இனமான பேராசிரியரின் 99வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பேராசிரியரின் பெருமைகளைக் குறிப்பிட்டு நினைவுகூர்ந்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மாணவப் பருவம் தொட்டு தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவுடன் மிகுந்த ஈடுபாடு கொண்டு, அவர்களது நன்மதிப்பை ஈட்டிய நம் இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகன் அவர்கள் உருவத்தால் மறைந்தார் எனினும், தன்மானம் என்று சொல்வதைவிட, நிரந்தரமாக, இனமானம் என்ற உணர்வுகளாக நம் நெஞ்சங்களில் நிறைந்தார் என்பதே, தத்துவ ரீதியான உண்மையாகும்!
இளமைக் காலத்தில் ஏற்ற கொள்கையும், லட்சியமும் அவருக்கு முதுமையிலும் உறுதிமிக்க வழிகாட்டிகளாக அமைந்தன!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக, அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு கலைஞர் அவர்களுக்குத் தோன்றாத் துணையாகவே இறுதி மூச்சடங்கும்வரை இருந்ததோடு, கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வை வழிநடத்திட முழுத் தகுதியும், ஆற்றலும் படைத்த ஓய்வறியா உழைப்பாளரான தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையை அடையாளம் காட்டியதோடு, கட்டுப்பாடு காத்து, இளையோ ருக்கும், முதியோருக்கு வயது இடைவெளி இன்றி வாழ்ந்த லட்சிய வீரராகவே இறுதிவரை திகழ்ந்தார்!
தாய்க் கழகமான திராவிடர் கழகத்திடமும், நம்மிடமும் அவர் காட்டிய அன்பும், வாஞ்சையும் என்றும் மறக்க முடியாதவை!
அவர் வற்புறுத்திய இனமானம் ஏற்றம் பெற, திராவிடம் வெல்லும் என்று காட்ட கடுமையாக உழைத்து உறுதி ஏற்பதே - அவரின் 98 ஆம் ஆண்டு பிறந்த நாளில், இனமானப் பேராசிரியரை வாழ்த்துவதின் முழுப் பொருள் ஆகும்! வெல்க திராவிடம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இனமானப் பேராசிரியர் நினைவில் வாழும் மானமிகு க.அன்பழகன் அவர்களின் 98-ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (19-12-2020) அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப் படத்திற்கு தி.க துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.