கொரோனா ஊரடங்கின்போது ரேஷனில் கூடுதல் அரிசி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான புகாரில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிய ஆளுநரின் ஒப்புதலைப் பெற லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி, தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ ரேஷன் அரிசி கூடுதலாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய உணவுக் கழகம் மூலமாக அரிசியை அனுப்பி வைத்தது.
தமிழகத்தில் கூடுதல் அரிசி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், மத்திய அரசு உத்தரவுப்படி குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்குவதற்கு பதில், குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கியதாகவும், மீதமுள்ள அரிசியை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் மூலம் நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மாநிலத்தில் 80 சதவீத குடும்பங்கள் அந்த அரிசியையும் பெறவில்லை என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், 90 சதவீதத்திற்கும் மேலானோருக்கு அரிசி வழங்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசிடம் பெற்ற ரேஷன் அரிசியை பொதுமக்களுக்கு வழங்காமல் முறைகேடாக விற்ற விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி மீதும், அமைச்சர் காமராஜ் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை இயக்குனரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
தனது புகாரில் போதிய முகாந்திரம் உள்ளதால் முதல்வர் மற்றும் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநரின் ஒப்புதலைப் பெற லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.