திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரையை கழக மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி மேற்கொண்டார்.
அதன்படி, பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் துறையினர், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், அருந்ததியர் மக்கள் சந்திப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் செய்த சாதனைகளையும், திட்டங்களையும் பொது மக்களிடம் எடுத்துக் கூறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
இரண்டு நாள் சுற்றுப் பயணத்தின் இறுதிக் கட்டமாக உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் கூடியிருந்த பொதுமக்களிடையே கலந்துரையாடல் நடத்தினார். அப்போது பேசிய அவர், “கால்நடை பற்றி தெரியாத உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கால்நடைத்துறை அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். அமைச்சர் வேலுமணி நீர்நிலை கொள்ளையர்.
அதப்போல், போலி விவசாயி எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக வீட்டிலிருந்து விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார்” எனத் தெரிவித்தார்.
பின்னர் கடைவீதியில் நடந்து சென்று வியாபாரிகளிடம் தேர்தல் பரப்புரை செய்தார். கடைவீதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கார்த்திகேய சிவசேனாபதிபதிக்கு வியாபாரிகள் உற்சாக வரவேற்பு கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முபாரக் அலி, நகர செயலாளர் மத்தின் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.