தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை மோடி அரசு தொடர்ந்து நடத்திவருகின்றது.
குறிப்பாக நாடுமுழுவதும் ஒரே தரமான கல்வி இல்லாததாலும், நீட் தேர்வு அச்சத்தாலும் தமிழகத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். உயிர் குடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடே கொந்தளித்த போது, பா.ஜ.க அரசு பிடிவாதமாக தேர்வை நடத்தியது.
அதுமட்டுமல்லாது, நீட் தேர்வு நடைபெறும் போது முறைகேடு, ஆள்மாறட்டம் போன்ற பல்வேறு சம்பவங்கள் போன்ற குளறுபடிகள் தொடர்ந்து அம்பலமானது. கடந்தாண்டு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது மருத்துவ கலந்தாய்வில் போலியான மதிப்பெண் சான்றிதழை கொடுத்த மாணவி மற்றும் அவருடைய தந்தை இருவர் மீதும் பெரியமேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7ம் தேதி மருத்துவ கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவருடைய மகள் மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டார்.
அப்போது கலந்தாய்வில் அவர் அளித்த சான்றிதழ்களில், சந்தேகம் எழுந்ததையடுத்து அது குறித்து விசாரணை நடத்திய போது, அது போலியான மதிப்பெண் சான்றிதழ் என தெரியவந்தது.
நீட் தேர்வில் மிக மிக குறைவான மதிப்பெண் எடுத்த மாணவி, 600க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது போன்று போலியான மதிப்பெண் சான்றிதழை கொடுத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனர் அளித்த புகாரின் அடிப்படையில், பெரியமேடு காவல் நிலையத்தில் மாணவி மற்றும் அவருடைய தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவரும் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் தந்தை பாலச்சந்திரனும் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.