கரூரில், தனது இரண்டு மகள்களின் கல்லூரி படிப்பிற்கு பணம் தயார் செய்ய முடியாமல், கேட்ட பக்கம் கடன் கிடைக்காத நிலையில், உறவுகளும் கைவிரித்ததால், மனமுடைந்த தந்தை கடிதம் எழுதி வைத்துவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் பசுபதிபாளையம் அருணாசலம் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (40). ஓட்டுனரான இவருக்கு, சுதா என்ற மனைவியும், ஹரிணி (17), ஹரிவர்ஷனி (17) என இரண்டு மகள்களும் உள்ளனர்.
இரண்டு மகள்களும் பிளஸ் டூ முடித்துள்ள நிலையில், ஈரோட்டில் உள்ள கல்லூரியில் மேல் படிப்பு படிக்க சேர்த்ததாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து சிரமப்பட்டு வந்த பாஸ்கரன் தனது மகள்களின் பட்ட படிப்பிற்கு பணம் தயார் செய்ய முடியாமல் தடுமாறி வந்துள்ளார்.
தனது உறவினர்களிடம் பணம் கேட்டும், வட்டிக்கு பணம் கேட்டும் கிடைக்கவில்லை. வைத்திருக்கும் ஒரு டிராவல்ஸ் வாகனத்தையும் விற்று விடலாம் என பாஸ்கர் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாகனத்தை விற்க எப்.சி மற்றும் இன்சூரன்ஸ் கட்ட முடியாத நிலையில் மனமுடைந்த பாஸ்கரன் நேற்று இரவு இறுதிக் கடிதம் எழுதி வைத்துவிட்டு கருர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாந்தோன்றிமலை போலிஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.