“போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக அமைச்சரவையில் இருக்கிறாரா அல்லது கமிஷன் மயக்கத்தில் கண் திறக்க முடியாமல் இருக்கிறாரா என்றே தெரியவில்லை” என தி.மு.க. முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஊழல் என்ற கரன்சி முகட்டில் உட்கார்ந்து கொண்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்- ஏதோ தன் துறையில் ஊழலே நடக்கவில்லை என்று அப்பாவி போல் நேற்று முன் தினம் போட்ட வேடத்தை நேற்று கலைத்து விட்டது சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவு.
“118 நிறுவனங்கள் இருக்கும் போது 8 நிறுவனங்களிடம் ஜி.பி.எஸ். கருவி வாங்க போக்குவரத்துத்துறை அளித்த உத்தரவுக்கு” தடை வழங்கியுள்ள உயர்நீதிமன்றம் போக்குவரத்து செயலாளர் ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனங்களுக்கு போட்ட உத்தரவை போக்குவரத்து ஆணையர் நிறுத்தி வைத்துள்ளதாக இன்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் செய்தி வெளி வந்துள்ளது.
“கெட்டிக்காரர் புழுகு எட்டு நாளைக்கு நிலைக்காது ” என்பது போல் ஊழலே நடக்கவில்லை என்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் புழுகு 24 மணி நேரம் கூட நிலைக்கவில்லை. தன் துறையில் ஊழலே இல்லை என்ற அமைச்சரின் பேட்டி இந்த ஆண்டு இறுதியின் மிகப்பெரிய நகைச்சுவை! ஊழலுக்காகவே சிறைக்குப் போன முதலமைச்சர் தன் கட்சியிவ் இருந்ததை மறந்து விட்டு- தி.மு.க. பற்றியும், எங்கள் கழகத் தலைவர் பற்றியும் பேசுவதற்கு விஜயபாஸ்கருக்கு என்ன தகுதி இருக்கிறது? பேட்டி என்ற பெயரில் பத்திரிக்கையாளர்களை வைத்துக் கொண்டு வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால் அந்த உளறலின் போது எங்கள் கழகத் தலைவர் வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்றிற்குக் கூட பதில் இல்லை. எங்கள் கழகத் தலைவர் எழுப்பிய ஊழல்களுக்கு நேரடியாக பதில் சொல்ல வக்கின்றி- “ஊழலே நடக்கவில்லை. ஆதாரமற்ற அறிக்கை” என்று ஒய்யாரக் கொண்டையாம் அதில் இருக்குமாம் ஈரும் பேனும் என்று பேட்டியளித்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்!
ஒரு குறிப்பிட்ட கம்பெனிகளிடம் மட்டும் ஒளிரும் பட்டை வாங்க போக்குவரத்துத்துறை வெளியிட்ட உத்தரவிற்கு ஏற்கனவே உயர்நீதிமன்றமே தடை போட்டு இப்போது ஜி.பி.எஸ் கருவி விவகாரத்திலும் உயர்நீதிமன்றம் புதிய தடையுத்தரவு வழங்கிய பிறகும்- தன் முகத்தில் கரி பூசப்பட்ட நிலையில்- “என் துறையில் ஊழலே நடக்கவில்லை” என்று வாதிடுவது- “பறப்பது வெள்ளைக் காக்காய் மட்டுமல்ல- அது ஜோராகவும் பறக்கிறது” என இருக்கிறது. ஆகவே, தன் முகத்தை கண்ணாடி முன்பு நின்று அமைச்சர் பார்த்தால்- அமைச்சரின் முகமே அவரைப் பார்த்து குறும்புத்தனமாக சிரிக்கும்! “தனியார் கம்பெனிகள்தான் ஒளிரும்பட்டை உள்ளிட்டவற்றை தயாரிக்கிறது” என்று ஒரு புதிய கண்டிபிடிப்பை தனது பேட்டியில் கூறியிருக்கிறார் விஜயபாஸ்கர்.
அரசு நிறுவனம் தயாரிக்கிறது என்று எங்கள் கழகத் தலைவர் கூறவே இல்லை. அப்படியிருக்கையில் ஏன் இந்த குதர்க்கமான மறுப்பு? எங்கள் கழகத் தலைவர் கேட்டது “ஏன் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் மட்டும் ஒளிரும் பட்டை உள்ளிட்ட கருவிகளை பொருத்திய பிறகு- அந்த தனியார் நிறுவனங்களின் வெப்சைட்டில் ஆர்.டி.ஓ அலுவலர்கள் ஒப்பிட்டுப் பார்த்து எப்.சி வழங்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்” என்பதுதான். அதற்கு அமைச்சர் தனது பேட்டியில் கடைசி வரை பதில் சொல்லவே இல்லை!
ஒளிரும் பட்டை விவகாரத்தில் போக்குவரத்து துறை ஆணையர் அப்படியொரு உத்தரவை வெளியிட்டாரா இல்லையா? அந்த உத்தரவை எதிர்த்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததா இல்லையா? உயர்நீதிமன்றம் போக்குவரத்துத்துறை ஆணையரின் உத்தரவுக்கு தடை விதித்ததா இல்லையா? உயர்நீதிமன்றம் தடை விதித்ததால், குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் என்ற அந்த உத்தரவில் மீண்டும் சில மாற்றங்களை மட்டும் செய்து போக்குவரத்து ஆணையர் சுற்றறிக்கை அனுப்பினாரா இல்லையா? சவால் விடுகிறேன். அமைச்சர் விஜயபாஸ்கரால் இவற்றை மறுக்க முடியுமா?
“தேசிய நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் குறித்த” டெண்டரில் 23 கோடி ரூபாய் 900 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது என்று எங்கள் கழகத் தலைவர் கூறியதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். பாவம் அந்த கோப்புகள் எல்லாம் அவரிடம் இருக்கிறது. ஆதாரத்தை எங்கள் தலைவரிடம் கேட்கிறார். இருந்தாலும் நான் ஒரு சில கேள்விகளை மட்டும் இதில் கேட்கிறேன். எங்கள் தலைவர் கூறியது போல் டெண்டரில் பங்கேற்கும் கம்பெனி “200 சிஸ்டம்களை அமைத்துக் கொடுத்தால் போதும்” என்று முதலில் டெண்டர் விட்டது உண்மையா இல்லையா? பிறகு “1000 சிஸ்டம்கள்” என எண்ணிக்கையை உயர்த்தி டெண்டரை திருத்தியது ஏன்?. அதே போல் பங்கேற்கும் நிறுவனம் “150 சிஸ்டம்கள் செய்த நிறுவனமாகவும்- குறைந்த பட்சம் இது போன்ற இரு திட்டப் பணிகளை எடுத்துச் செய்த நிறுவனமாகவும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்” என்று டெண்டரில் கூறப்பட்டது உண்மையா இல்லையா? “ப்ரீ பிட்” கூட்டத்திற்குப் பிறகு “30 சிஸ்டம்கள் உள்ள ஒரேயொரு திட்டத்தை டெண்டரில் பங்கேற்கும் நிறுவனம் செய்திருந்தாலே போதும்” என்று அனுபவத்தை குறைத்து திடீரென ஒரு திருத்தம் டெண்டரில் வெளியிட்டது ஏன்? “கொரோனா காலத்தால் டெண்டர் பலமுறை தள்ளிவைக்கப்பட்டது” என்று நொண்டிச்சாக்கு கூறுகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
அவர் அதிமுக அமைச்சரவையில் இருக்கிறாரா அல்லது கமிஷன் மயக்கத்தில் கண் திறக்க முடியாமல் இருக்கிறாரா என்றே தெரியவில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துறையில்தான் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர்கள் விடப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துறையிலும்தான் கொரோனா காலத்திலும் மளமளவென டெண்டர்கள் விடப்பட்டு- திறக்கப்பட்டுள்ளன. அந்த டெண்டர்களை கொரோனா காலத்தில் திறக்க முடிந்த போது- ஏன் போக்குவரத்து துறையில் மட்டும் டெண்டர் திறக்கவில்லை. பல முறை தள்ளி வைக்கப்பட்டது? கமிஷன் வரும் கான்டிராக்டருக்கு கைகாட்டவே டெண்டர் தள்ளிவைக்கப்பட்டது என்பதுதான் பேட்டியில் அவர் பதில் சொல்ல முடியாமல் தத்தளிப்பதில் தெரிகிறது. இதுதான் அதிமுக ஆட்சியில் நடக்கும் ஒளிவு மறைவற்ற டெண்டரின் லட்சணமா?
ஆகவே விஜயபாஸ்கருக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எங்கள் கழகத் தலைவர் எப்போதும் ஆதார பூர்வமான ஊழல்களைத்தான் அறிக்கையாகக் கொடுக்கிறார். இன்னும் பல ஊழல் பட்டியல்கள் எங்கள் கழகத் தலைவரிடம் அரசு அதிகாரிகள் கொடுத்து வைத்துள்ளார்கள். அவை சமயம் வரும் போது “சுனாமி” போல் அதிமுக அமைச்சர்களை வந்து தாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது அவர் துறையில் இரு முறை உயர்நீதிமன்றம் ஒளிரும்பட்டை, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட உத்தரவுகளுக்கு தடையுத்தரவும் வழங்கி விட்டது.
என் துறையில் ஊழல் நடக்கவில்லை என்று இதற்குப் பிறகும் அமைச்சர் பல்லவி பாடி தன்னையும் ஏமாற்றி- மக்களையும் ஏமாற்றக் கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளில் வேகக் கருவி அமைக்கும் டெண்டரிலும், ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ் கருவி ஆகியவற்றை சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற உத்தரவு போட்ட அரசு கோப்புகளை இன்றே லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையிடம் ஒப்படையுங்கள். ஊழல் உண்டா இல்லையா என்பதை லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையே விசாரிக்கட்டும்! அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திராணியும் தெம்பும் இருக்கிறதா? அமைச்சர் இந்த ஊழல் கோப்புகளை கொடுக்கிறாரோ இல்லையோ லஞ்ச ஒழிப்புத் துறையே சம்பந்தப்பட்ட கோப்புகளை கைப்பற்றி எங்கள் கழகத் தலைவர் கேட்டது போல் உடனடியாக விசாரணையை நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.