மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தி.மு.கவினர் செய்துக்கொடுக்கும்படி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, நிவர் மற்றும் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அம்மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.கவினர் செய்து வருகின்றனர்.
அதன்படி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்த காரணத்தால் சேதமடைந்த 60க்கும் மேற்பட்ட வீடுகளை பார்வையிட்ட, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறார்.
நிவர் புயல், வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாள் தோறும்தொடர் மழை பெய்து வரும் நிலையில், கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூர், பெரும்பாண்டி, கொரநாட்டுக்கருப்பூர், அசூர், கடிச்சம்பாடி, தேவனாஞ்சேரி, நீலத்தநல்லூர், திருப்புறம்பியம், வாளபுரம் மற்றும் ஏரகரம் ஆகிய ஊராட்சிகளில் 60 க்கும் மேற்பட்ட வீடுகள் கனமழையின் காரணமாக சேதமடைந்துள்ளனர்.
ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ அரசின் உதவிகள் கிடைக்காமல் அப்பகுதி ஏழை, எளியவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதனையறிந்த கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் நேற்று ஒரேநாளில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், 60க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சொந்த பணத்தில் இருந்து இயன்ற நிதி உதவிகள் செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இப்பணியின் போது கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கணேசன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.கே.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.