விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” பிரச்சாரப் பயணத்தை தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா இன்று துவங்கினார்.
அதன்படி, அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தி.மு.க கொடியை ஏற்றி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தனது பிரச்சார பயணத்தை துவக்கினார்.
முன்னதாக பிரச்சார பயணத்தை துவக்கிய திருச்சி சிவாவிற்கு விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட நகர, ஒன்றிய தி.மு.க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அருப்புக்கோட்டை பஜார் பகுதியில், நகைக்கடை, ஜவுளிக் கடை உரிமையாளர்களைச் சந்தித்து ஜி.எஸ்.டியால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஆமணக்கு நத்தம் கிராமத்திற்குச் சென்ற திருச்சி சிவா, வயலில் இறங்கி அமெரிக்கன் படைப்புழு தாக்குதலுக்கு உள்ளான பயிர்களை பார்வையிட்டார்.
பின்னர் விவசாயிகளுடன் கலந்துரையாடிய திருச்சி சிவா அவர்களிடையே பேசுகையில், “தி.மு.க ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு பாடுபடும் இயக்கம். அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்களைப் பற்றி கவலைப்படாமல் தங்களை பற்றியே ஆட்சியாளர்கள் சிந்திக்கின்றனர். எங்களிடம் அள்ளிக்கொடுக்க ஏதுமில்லை. ஆனால் உங்களுக்காக போராடும் சக்தி உள்ளது.
தற்போது வந்துள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகள் விலை நிர்ணயம் செய்யமுடியாது. மத்திய பா.ஜ.க அரசு விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் எதிராகவும் சட்டங்களை கொண்டுவருகிறார்கள். அதை எதிர்க்க வக்கில்லாத ஆட்சியாக அ.தி.மு.க அரசு உள்ளது.
விவசாயிகள் கண்ணியமாக நிம்மதியாக வாழத் தேவையானவற்றை தி.மு.க செய்யும் அதற்கு நீங்கள் தி.மு.கவை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.