மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய பா.ஜ.க, மாநில அ.தி.மு.க அரசுகளை கண்டித்தும் தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தி.மு.கவின் சார்பில் இன்று கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்த கொண்ட தி.மு.க அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தலைமையில் விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டத்தை எதிர்த்தும், மத்திய பா.ஜ.க மற்றும் மாநில அ.தி.மு.க அரசுகளுக்கு எதிராக கைகளில் கறுப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு 1000த்திற்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கருப்பு சட்டை அணிந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் தி.மு.க அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கண்டன உரையாற்றி பேசுகையில், “இந்தியாவில் ஒரே நாளில் இப்படியொரு போராட்டத்தை நடத்துகிற ஆற்றல் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத்தான் இருக்கிறது. இன்று நடைபெறும் தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செல்கின்ற தி.மு.கவினரை காவல்துறையினர் ஆங்காங்கெ கைது செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்டமெல்லாம் இன்னும் மூன்று அமாவாசைகள் தான். அவர் எந்த ஜெயிலுக்கு போக வேண்டும் என அவரே முடிவு செய்து கொள்ளலாம். தி.மு.கவினர் எதற்கும் அஞ்சுபவர்கள் கிடையாது. சிறைச்சாலைகளின் கதவுகளை எல்லாம் பலமுறை முத்தமிட்டவர்கள் தி.மு.கவினர்.
மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள். அப்படிப்பட்ட எங்கள் தி.மு.க தொண்டர்களை சேலத்தில் தற்போது காவல்துறையினர் மூலம் கைது செய்து அடக்குமுறையை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விவசாயத்தை பற்றி என்ன தெரியும் என தமிழக முதல்வர் எட்ப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்.
நான் அரசியலுக்கு வரும்போது அமித்ஷா பிறக்கவே இல்லை. நான் அரசியலுக்கு வந்தே 60 ஆண்டுகள் ஆகிறது. அமித்ஷாவிற்கு 56 வயது தான் ஆகிறது. அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்.
ஆனால் இன்று எங்களை பார்த்து சர்க்காரியா கமிஷன் பற்றி முதலமைச்சர் பேசுகிறார். சர்க்காரியா கமிஷன் பற்றி முதலமைச்சருக்கு என்ன தெரியும்? சர்க்காரியா கமிஷன் பற்றி என்னோடு விவாதிக்க அ.தி.மு.கவினர் யார் வந்தாலும் நான் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி. எழிலரசன், ஆர்.டி.அரசு, எஸ்.புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.ஏ சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர்கள் அ.தசரதன், வெளிக்காடு ஏழுமலை, வசந்தமாலா, மாவட்ட பொருளாளர் டி.கோகுலக்கண்ணன், ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்த அமைப்பாளர்கள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.