மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது இன்று (டிச.,04) வரையில் அதே பகுதியில் நீடிக்கும்.
அதன் பிறகு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மெதுவாக மேற்கு தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக தெற்கு கேரளாவை நோக்கி ராமநாதபுரம் வழியாக நகரக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. ஆனால் அக்டோபர் 1 முதல் தற்போது வரை இயல்பை விட 2 சதவிகிதம் குறைவாகவே பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. அதன்படி 11 இடங்களில் அதி கனமழையும், 20 இடங்களில் மிக கனமழையும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகை கொள்ளிடத்தில் 36 செ.மீ, சிதம்பரத்தில் 34 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரக்கூடும். கடலூர், நாகை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், வேலும் மற்றும் வட மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
தமிழக மற்றும் மன்னார் கடற்கரை பகுதிகளில் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகளுக்கு நாளை வரை மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவேண்டாம். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும். சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.” எனக் கூறியுள்ளார்.