தமிழ்நாடு

தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம் : உடனடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த இடைவிடாத கனமழை காரணமாக சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம் : உடனடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புரெவி புயலால் பெய்துவரும் கனமழை காரணமாகத் தமிழகம் முழுவதும் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

புரெவி புயல் காரணமாகக் காவிரி டெல்டா பகுதிகள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த இடைவிடாத கனமழை காரணமாக சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தமிழகம் முழுவதும் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், “புரெவி புயல் தாக்குதலால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் பத்து லட்சம் ஏக்கர் உட்பட, தமிழகம் முழுவதிலும் 25 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடிப் பயிர்கள் மழைநீர் சூழ்ந்து அழுகத் தொடங்கியுள்ளன.

கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர் வகைகள் சாய்ந்து அழியத் தொடங்கிவிட்டன. கொரோனாவால் பல இன்னல்களுக்கு ஆட்பட்ட விவசாயிகள் தற்போது புயல் தாக்குதலால் பேரழிவைச் சந்தித்து வருகின்றனர்.

தமிழக அரசு உயர்மட்டக் குழுவை அனுப்பி, பாதிப்பு குறித்து உடனடியாக ஆய்வு செய்திட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 இழப்பீடாக வழங்க வேண்டும். தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களின் பாதிப்பிற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

இடி, மின்னல் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்குத் தலா 10 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு கூரை வீடு ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும், ஓட்டு வீடு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்குவதோடு, நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவதற்கு உடனடி அனுமதி வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

பேரிடரில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசாங்கம் 10 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக, முதற்கட்டமாக விடுவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories