தமிழ்நாடு

“என் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு பதில் நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள்” - இளைஞரணியினருக்கு உதயநிதி வேண்டுகோள்!

இந்த இக்கட்டான நேரத்திலும் நாம் உதவிகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும், நிவாரணப் பணிகள் செய்வதும் தான் உண்மையான கொண்டாட்டம்.

“என் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு பதில் நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள்” - இளைஞரணியினருக்கு உதயநிதி வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“எதிர்வரும் நவம்பர் 27-ம் தேதி எனது பிறந்த நாளை கொண்டாடத் தமிழகம் முழுவதும் இளைஞரணியினர் உள்ளிட்ட கழகத் தொண்டர்கள் தயாராகி வருகிறீர்கள். என் மீதுள்ள உங்களின் மாசற்ற அன்பை நான் அறிவேன். கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தல் படி கடந்த 4 நாட்களாக நாகை - தஞ்சை மாவட்டங்களில் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரச்சாரப் பயணம் மேற்கொண்டபோது, உங்களின் அந்த பேரன்பை நேரில் பெரும் வாய்ப்பினையும் பெற்றேன்.

எடப்பாடியின் சொல் கேட்டு காவல்துறை முடக்க நினைத்த நிலையில், கழக முன்னோடிகள், இளைஞர்களின் உறுதி நம் பயணத்தை வெற்றிகரமாய் தொடரச்செய்தது. எங்களைத் தொடர்ந்து கைது செய்ததைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய தலைவர் உள்ளிட்ட கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக்குழுவுக்கும், நான் கைதான மூன்று நாட்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் செய்து என்னுடன் சேர்ந்து கைதான மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னோடிகளுக்கும், மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் இச்சமயத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்கிடையே வங்கக் கடலில் நிவர் என்னும் புயல் உருவாகி அது தமிழகம் - புதுவை கரையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளது. வானிலை ஆராய்ச்சி மைய அறிவுறுத்தலின் பேரில் சில மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்' எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. எனவே, பிரச்சாரப்பயணத்தை தலைவர் அறிவுறுத்தலின் பேரில் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். நாம் ஏற்கனவே சந்தித்த கஜா, ஒக்கி, வர்தா, தானே போலவே இந்த புயலும் பேரிடரை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

இது பேரிடர் காலம். மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அரசின் கையாலாகாத்தனத்தை கண்டு சலித்துப்போன பொதுமக்கள், 'ஒரு வேளை அசம்பாவிதங்கள் நடந்தால் யார் உதவிக்கரம் நீட்டுவர்? யார் நம்மைக் காக்க வருவர்? எனத் தவிப்பில் உள்ளனர். அதற்கான பதிலை நம் கழகத் தலைவர் அவர்கள் சொல்லிவிட்டார். நம்முடைய கழகத்தினர் மீட்புப் பணி, நிவாரணப்பணிகளில் ஈடுபட வேண்டுமென்று அவர் கட்டளையிட்டுள்ளார்.

இளைஞரணி நிர்வாகிகள், தம்பிமார்கள், கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அசாதாரண சூழல்கள் எழுந்த போதெல்லாம் களத்தில் நின்று மக்கள் துயர் துடைத்திருக்கிறோம். எனவே, இந்த இக்கட்டான நேரத்திலும் நாம் உதவிகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும், நிவாரணப் பணிகள் செய்வதும் தான் உண்மையான கொண்டாட்டம். இதுதான் தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் நமக்குக் கற்றுத்தந்த பாடம்.

இதை மனதிற்கொண்டு, எனது பிறந்த நாளையொட்டி சுவரொட்டிகள் ஒட்டுவது, ஆடம்பர பேனர்கள் வைப்பது, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போன்றவற்றைத் தவிர்த்து, கனமழை பெய்யும் இடங்கள் - புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இளைஞரணியினர் நிவாரணம்- மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். மற்ற பகுதிகளில் இரத்த தானம், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிப் பணிகளில் ஈடுபடுமாறு இளைஞரணி தோழர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.”

banner

Related Stories

Related Stories