கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் யூனியன் அமைப்பை சேர்ந்த ஏராளமான மீனவ பிரதிநிதிகள் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனுவில், “நவம்பர் உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக தேசிய மீன்வள கொள்கை 2020 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனை வாபஸ் வாங்க வேண்டும்.
இதுதவிர மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த நலனும் இதுவரை கிடைக்கவில்லை. குறிப்பாக 60 வயது முதிர்ந்த ஒருவர் கூட மீனவருக்கான ஓய்வு ஊதியம் பெறவில்லை. 4,266 பேருக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் மானியத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை வழங்கவில்லை.
தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்யாத காரணத்தால் ஐந்து உயிர்கள் பலியாகின. தமிழக முதல்வர் நாகர்கோவில் வருகையின் போது இதனை அறிவிப்பார் என இருந்த நிலையில், எந்த அறிவிப்பும் வெளியிடாததால் மீனவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
எனவே இது போன்ற பல்வேறு காரணங்களால் இந்த மீனவர் தினத்தை சோக தினமாக கடைபிடிக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.