2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற முழக்கத்தோடு இன்று தேர்தல் பரப்புரையைத் துவங்கினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து மக்கள் திரளோடு தனது தேர்தல் பரப்புரையைத் துவக்கிய உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினரின் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தி.மு.கவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், “ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாட்டை தடுத்துவிடலாம் என்று எடப்பாடி அரசு கருதுமானால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே அவர்கள் மக்கள் மன்றத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள்” என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகம் மீட்போம் என்ற கொள்கைப் பிரகடனத்துடன் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரைப் பயணத்தை திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இதுதொடர்பான முறையான அறிவிப்பை கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிவிப்பு செய்துள்ளார்.
இதன் தொடக்கமாக கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று மதியம் தனது பரப்புரையைத் தொடங்கி உள்ளார். பரப்புரைப் பயணத்தை, தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்கு வித்திட்ட தமிழ் ஒளிவிளக்காம் முத்தமிழறிஞர் எங்கள் தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை வீட்டில் இருந்து கால் பதித்து அங்கிருந்து தொடங்கினார்.
பயணம் தொடங்கிய இடத்திலும், வழியெங்கும் குவிந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க அரசு, காவல்துறையின் துணையோடு இந்தப் பயணத்தை நசுக்க முடிவெடுத்துள்ளது. உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை நடக்க இருந்த முதற்கட்ட பயணத்தை தொடங்கிய இடத்திலேயே மறித்த அ.தி.மு.க அரசின் அராஜக போக்குக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நித்தமும் ஒரு மாவட்டத்துக்குப் போய், அரசு நிகழ்ச்சி, ஆய்வு என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளை தரம் தாழ்ந்து விமர்சித்து தனது அரசியல் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பேட்டிகள் கொடுப்பது, கலந்தாலோசனைகள் செய்வது என்பதை அவரோ அமைச்சர்களோ அவர்களது கட்சியோ நிறுத்தவில்லை.
ஆனால் தி.மு.க நடத்தும் கூட்டங்களாக இருந்தால் அதற்கு அனுமதி மறுப்பதை வழக்கமாக வைத்துள்ளது அரசு. ஆளுநர் மாளிகை நோக்கிய மகளிர் பேரணியைத் தடுத்து, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோரைக் கைது செய்தது இந்த அரசு. ஆனால் அமைச்சர்களுக்கோ, ஆளும்கட்சிக்கோ எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.
இதை வைத்துப் பார்க்கும்போது, தி.மு.கவின் தேர்தல் பணிகளைத் தடுக்கும் நோக்கத்துடன் தான் கொரோனா கட்டுப்பாட்டுகள் என்ற திரைமறைவுக் கட்டுப்பாடுகளை எடப்பாடி பழனிச்சாமி தொடர்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது. இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி கைது செய்யப்பட்டாலும், இந்த பரப்புரை பயணம் நிற்காது.
அவர் தனது பயணத்தை தொடர்வார். திட்டமிட்டபடி கழக முன்னணியினர் அனைவரும் தங்களது பயணங்களைத் தொடர்வார்கள். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாட்டை தடுத்துவிடலாம் என்று எடப்பாடி அரசு கருதுமானால் அது, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே மக்கள் மன்றத்தில் தனிமைப்படுத்தப்பட்டு விடும் என எச்சரிக்கிறேன்.
இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஜனநாயக உரிமை, கருத்துரிமை ஆகியவற்றைக் கருத்தில் வைத்து பரப்புரைப் பயணத்துக்கான முறையான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முறையான அனுமதி தர அரசும், காவல்துறையும் மறுக்கப்படுமானால் தடையை மீறி கழகத்தின் பிரச்சாரப் பயணம் தொடரும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.k
உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்துள்ள தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., “முதலமைச்சர் எடப்பாடி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் தி.மு.க தலைவர்களோ எங்கும் செல்லக்கூடாது. அடிமை அ.தி.மு.க அரசுக்கு தி.மு.கவின் பிரச்சாரத்தின் முதல் நாளே பயம் தொற்றிவிட்டது.
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவருடைய பிரச்சார பயணம் தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, திருக்குவளையில் பொதுமக்களைச் சந்திக்க முயன்ற, தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் கைது செய்தது, கடும் கண்டனத்திற்குரியது.
கருத்துரிமையை, பேச்சுரிமையை யாராலும் தடுக்க முடியாது. மிசா, தடா, பொடா போன்ற சட்டங்களாலும் முடியவில்லை. நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதி என்ற அச்சத்தில், எடப்பாடி பழனிச்சாமி அரசு, இத்தகைய அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளது.
ஆட்சியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது, எதிர்க்கட்சிகளின் கடமை. அதற்காக, பொதுமக்களைச் சந்திக்கும்போது பாதுகாப்பு வழங்க வேண்டுமே தவிர, சந்திக்க விடாமல் தடுக்க, எந்த அதிகாரமும் இல்லை. ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கின்ற முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது; அண்ணா தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கவும் முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.