ரத்தான தஞ்சாவூர் சாலைப் பணிகள் டெண்டரை நெடுஞ்சாலை துறை பெயர் மாற்றி மீண்டும் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னே பெரும் முறைகேடு நிகழ்வதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தஞ்சாவூர் Performance Based Maintenance Contract (PBMC) டெண்டர்கள் இரண்டாக ரூ. 1165 கோடிக்கும், ரூ. 660 கோடிக்கும் மே மாதம் போடப்பட்டு ஜூலை மாதம் நிறைவடைந்தது. இந்த டெண்டர்களில் எப்படி நல்ல நிலையில் உள்ள சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதும் ஒரு கி.மீக்கு மிக அதிகமாக ரூ.2.33 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறப்போர் இயக்கம் புகாராக ஜூலை 18 2020 அன்று நெடுஞ்சாலை செயலுருக்கும் நிதித்துறை செயலருக்கும் அனுப்பியது.
மிக முக்கியமாக ரூ.1165 கோடி Phase-1 டெண்டர் முடிவதற்கு முன்பாக ஜூலை 20ல் அந்த டெண்டர் யாரின் சார்பில் செட்டிங் செய்யப்பட்டுள்ளது என்று நமக்கு கிடைத்த தகவலையும் செயலர்களுக்கு தெரிவித்தோம். இதன்பிறகு இந்த ரூ.1165 கோடி Phase 1 டெண்டர் நெடுஞ்சாலை துறையால் ரத்து செய்யப்பட்டது. பிறகு இதே டெண்டரை வேறு பெயரில் இரண்டாக மாற்றி அக்டோபர் மாதம் நெடுஞ்சாலை துறை வெளியிட்டது.
Performance Based Maintenance Contract (PBMC) என்னும் பெயரை Area Based Comprehensive Road Improvement, Strengthening and Maintenance(AB-CRISM) என்று மாற்றினார்கள். ரூ.1165 கோடிக்கான 462 கி.மீ தஞ்சாவூர் சாலைகள் PBMC டெண்டரை, ரூ.656 கோடி 208 கி.மீ. சாலை(AB-CRISM) டெண்டராகவும் ரூ.494 கோடி, 254 கி.மீ. சாலை(AB-CRISM) டெண்டராகவும் இரண்டாக பிரித்து போட்டுள்ளார்கள். அதே டெண்டரை பெயர் மட்டும் மாற்றி மாறு வேஷத்தில் நெடுஞ்சாலை துறை வெளியிட்டது.
இந்த டெண்டர்கள் நேற்றும் இன்றும் திறக்கப்பட உள்ளது. இந்த டெண்டர்கள் யாருக்கு செட்டிங் செய்யப்பட்டுள்ளது என்று அறப்போருக்கு கிடைத்த தகவல்களையும் டெண்டர் திறப்பதற்கு முன்பாகவே நெடுஞ்சாலை துறை செயலருக்கும் நிதித்துறை செயலருக்கும் அறப்போர் இயக்கம் அனுப்பியுள்ளது. அதை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுள்ளோம். மிக முக்கியமாக நம் மாநிலமே நிதி நிலையில் மோசமாக உள்ள சூழ்நிலையில் ஏன் மீண்டும் மீண்டும் நெடுஞ்சாலை துறை இப்படி தேவை இல்லாத டெண்டர்களை போட தீவிரமாக உள்ளது?
இந்த டெண்டரில் உள்ள மூன்று முக்கிய பிரச்னைகளை ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளோம். இதுவரை PBMC டெண்டர்களில் ஒரு கி.மீ.க்கு ரூ.1 கோடி கொடுத்து வந்த நெடுஞ்சாலை துறை, ரூ.656 கோடி 208 கி.மீ, சாலை(AB-CRISM) டெண்டரில் ஒரு கி.மீ.க்கு ரூ 3.15 கோடி கொடுப்பதும் அதே போல் ரூ.494 கோடி 254 கி.மீ. சாலை(AB-CRISM) டெண்டரில் ஒரு கி.மீ.க்கு ரூ.1.95 கோடி கொடுப்பதும் அபத்தம். இது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல். இதில் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக PBMC என்னும் பெயரை மட்டும் AB-CRISM என்று மாற்றி உள்ளார்கள்.
இந்த டெண்டரில் சேர்க்கப்பட்டுள்ள பல சாலைகள் மிகவும் நல்ல நிலையில் உள்ள சாலைகள். எதற்காக அவற்றை பராமரிக்க ஒரு கி.மீ.க்கு ரூ.3.15 கோடி? அகலப்படுத்தும் பல சாலைகள் பெரிய அளவில் வாகன traffic ஏற்படாத சாலைகள் என்பதை அறிகிறோம். Traffic census வேண்டுமென்றே அதிகப்படுத்தி காட்டப்படுள்ளதாக அறப்போருக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அறப்போர் இயக்கம் இந்த சாலைகள் அகலப்படுத்த வேண்டியவை தானா என்பதை அறிய தன்னிச்சையான குழு ஒன்று இந்த Traffic census சர்வே செய்ய வேண்டும் என்று நிதித்துறை செயலருக்கும் நெடுஞ்சாலை துறை செயலருக்கும் ஜூலை மாதம் புகார் அனுப்பியது. அதை செய்யாமலே மீண்டும் இப்படி டெண்டர் போடுவதன் அவசரம் என்ன? தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதன் விவரங்களை கேட்டும் நெடுஞ்சாலை துறை அதை தர மறுக்கிறது.
ரூ.1000 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பணத்தை வீணடிக்காமல் இந்த டெண்டர்களை ரத்து செய்து மோசமாக உள்ள சாலைகளுக்கோ அல்லது வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கோ பயன் படுத்த வேண்டும் என்றும் இந்த முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் அறப்போர் இயக்கம் நிதித்துறை செயலருக்கும் நெடுஞ்சாலை துறை செயலருக்கும் மனு அனுப்பியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.