மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றிவரும் நிலையில் கடந்த 7மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்ககூடிய பகுதிகளில் லைசால் கிருமிநாசினி தெளிக்கசென்ற போது திடிரென இயந்திரம் வெடித்து சிதறியது.
இதில் மருந்துடன் சேர்ந்து இயந்திரத்தில் உள்ள சிறிய அளவிலான சிலிண்டரும் வெடித்து முகத்திலும், கண்கள் முழுவதிலும் பட்டதில் முகம் வெந்துபோனதோடு, கண் பார்வையும் குறைந்துள்ளது. தற்போது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பார்வை தெரியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் மாநகராட்சி தரப்பிலோ, அரசு தரப்பில் எந்த உதவியும் கிடைக்காத நிலையில் தங்களின் குடும்பத்திற்கு 25லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை மற்றும் குடும்ப உறுப்பினருக்கு அரசு பணி வழங்க கோரியும் மாரிமுத்துவின் மனைவி சாந்தி மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதுமட்டுமின்றி கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரத்தின் தரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.