காஞ்சிபுரம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நலவாரிய ஆன்லைன் நடைமுறையில் உள்ள குறைபாடுகளை நீக்கக்கோரி காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் தூண் அருகே கட்டுமான தொழிலாளர் நலவாரிய முன்னாள் தலைவர் பொன்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு நலவாரியத்தில் இணையதள நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை உடனடியாக களைய வேண்டும், ஒய்வூதிய நிலுவை தொகை வழங்க வேண்டும், கொரோனா நிவாரண நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்டுமான தொழிலாளர் நலவாரிய முன்னாள் தலைவர் பொன்குமார், “தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியின் போது கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட கட்டுமான தொழிலாளர் வாரியம், அமைப்புசாரா வாரியம் உள்ளிட்ட 17 வாரியங்கள் தற்போது செயல்படவில்லை. புதியதாக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் முறைகளில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன.
நாள்தோறும் ஒரு சட்டம், விதி, ஆவணங்கள் என கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு வேலையும் நலவாரியத்தில் நடைபெறவில்லை. அண்டை மாநிலங்களில் குறைந்த விலையில் சிமெண்ட் விற்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதிக விலைக்கு சிமெண்ட் விற்கப்படுகிறது.
அனைவருக்கும் அறிவிக்கப்பட்ட கொரோனா நிதியான இரண்டாயிரம் ரூபாய் சுமார் 60% பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீத தொழிலாளர்களுக்கு இன்னமும் கொரோனா நிதி வழங்கப்படவில்லை, இது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இரண்டு இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கொரோனா நிதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஆன்லைனில் பதிவு பெற முடியாத வேளையில் நேரடியாக பதிவு பெற வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இத்தீர்ப்பை இதுவரையில் இந்த ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவில்லை.
இதனையெல்லாம் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை என்றால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இரண்டரைக் கோடி தொழிலாளர்கள் அ.தி.மு.க ஆட்சிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்தார்.