தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் கனமழையும், 4 மாவட்டங்களில் மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் சென்னையின் நீராதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் ஏரிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின்போதான கடும் பாதிப்புக்குக் காரணம் செம்பரம்பாக்கம் ஏரியை அ.தி.மு.க அரசு கையாண்ட விதம் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும். செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியாகும். ஏரியின் நீர்மட்டம் 21 அடியை நெருங்கியுள்ளது.
மேலும், தொடர் மழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடையாறு ஆறு ஊரப்பாக்கம், ஆதனூரில் இருந்து தொடங்கி முடிச்சூர், வரதராஜபுரம் வழியாக மெரினா கடற்கரையில் கலக்கிறது. இந்நிலையில் சென்னை புறநகர்ப் பகுதியில் தொடர்மழை காரணமாக இன்று காலை முதல் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக முடிச்சூர், வரதராஜபுரத்தில் மழைநீர் புகுந்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் வரதராஜபுரத்தில் அணை கட்டப்பட்டு வருகிறது. அணை கட்டும் பணிகள் இன்னும் முழுமையடையதால் தற்போது அடையாறு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே விரைவாக அணையை கட்டி முடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.