சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள தேர்தல் பிரிவின் மாவட்ட வருவாய் அலுவலர் குலாம் ஜிலானி பாபா மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1.1.2021-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு, 2021-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது. அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வாக்காளர் பட்டியலின்படி, சென்னையில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 46 ஆயிரத்து 792. இதில் ஆண்கள் 19 லட்சத்து 43 ஆயிரத்து 566, பெண்கள் 20 லட்சத்து 2 ஆயிரத்து 223. இதர வாக்காளர்கள் 1013 பேர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற சுருக்க திருத்தத்தின்படி, இதில் 10,989 ஆண்கள், 9,167 பெண்கள், 8 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 20,161 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரை வாக்காளர் பட்டியல் படி சென்னையில் 19,39,694 ஆண்கள், 19,99,995 பெண்கள், 1015 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 39,40,407 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 481 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 189 வாக்காளர்களும் உள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் மண்டல அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன.
இப்பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு, தங்களது பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள டிசம்பர் 22ம் தேதி வரை மண்டல அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நவம்பர் 21 மற்றும் 22, டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதிலும் பொதுமக்கள் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ளலாம்.