விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் அய்யனார். இவர் தற்போது அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்துவருகிறார். இந்நிலையில் விக்கிரவாண்டி அருகே உள்ள தொரவி கிராமத்தில் குடும்பத்தினருடன் அய்யனார் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அய்யனார் வீட்டில் இல்லாத நேரத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான பி.கே.எஸ் என்ற சுப்பிரமணியன் தலைமையிலான கும்பல், அய்யனார் வீட்டிற்குள் புகுந்த அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூரையாடியது.
அப்போது வீட்டில் இருந்த டேபிள், சேர்கள், டிவி, பீரோ, ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கற்களாலும், உருட்டுக் கட்டைகளாலும் அடித்து நொறுக்கி சூரையாடியது. இது குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஜெயா டிவி ஒளிப்பதிவாளர் குணாநிதி விரைந்து சென்று அ.தி.மு.கவினர் நடத்திய தாக்குதலை படம் பிடித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.கவினர் ஜெயா டிவி ஒளிப்பதிவாளர் குணாநிதி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அய்யனார் வீட்டில் தாக்குதல் நடத்த கூடும் என்பதால் அவரது வீட்டின் அருகே ஏற்கனவே போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இருந்த போதிலும் குறைந்த அளவிலான போலீலிஸார் அங்கு இருந்ததால், போலிஸாரின் பாதுகாப்பையும் மீறி அ.தி.மு.கவினர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.