கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூரை சேர்ந்தவர் தொழிலதிபர் சிவசுப்பிரமணியன். இவர் குடியிருப்பி அருகில் தலித் சமூக மக்கள் வசிப்பதால், அவர்களது பார்வையும் தனது பார்வை அவர்களை குடியிருப்பை நோக்கி இருக்க கூடாது என்பதற்காக 20 அடி உயரத்திற்கு சுவரை எழுப்பி தீண்டாமையை கடைபிடித்ததாக ஊர் மக்கள் குற்றம் சாட்டினர்.
சுமார், 80 அடி அகலத்தில் 20 அடி உயரத்தில் கருங்கற்களால் எழுப்பட்ட அந்த சுவர் தூண்கள் எதுவும் இல்லாமல் அமைந்துள்ளது. அதனை அப்பகுதி மக்கள் ’திண்டாமை சுவர்’ என விமர்சிக்கின்றனர்.
இந்த நிலையில், விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக சுவரை ஒட்டியுள்ள நான்கு வீட்டைச் சேர்ந்தவர்கள், வீட்டின் உரிமையாளரிடமும் மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், அதை அதிகாரிகளும், வீட்டின் உரிமையாளரும் அலட்சியமாக எடுத்துக்கொண்டதன் விளைவு, கடந்த ஆண்டு டிசம்பர் 02ம் தேதியன்று, விரிசல் விழுந்த சுவரின் அடியில் நீர் தேங்கியதால், அந்த சுவர் அடியோடு தலித் குடியிருப்புகளின் மீது சாய்ந்தது. சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் மாநிலமே கொத்தித்து போனது. பின்னர் சிவசுப்பிரமணியனை கைது செய்ய வலியுறுத்தியும் உறவினர்கள் அனுமதி இல்லாமல் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்ததற்கும் அம்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்.
17 பேர் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யாமல், பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரின் நடவடிக்கை எதிர்ப்பு எழுந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படாதது வெட்கேடானது என கடுமையாக விமர்சித்தார்.
அதன்பின்னர் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு நீதிமன்றம் சென்ற நிலையில், உரிமையாளருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், வீட்டின் உரிமையாளர் மீண்டும் சுற்றுச்சுவர் கட்டுமான பணியை தொடங்கி நிறைவு செய்துள்ளார்.
அந்த இடத்தில் மீண்டும் அதே உயரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். மேலும், ”தங்களை சந்திக்க வந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் புதிய வீடு கட்டிதருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், அளித்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை” என வீடுகளை இழந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் சுவற்றி உறுதி தன்மைக் குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்க்கொண்டு தங்களின் அச்சத்தை போக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுவர் மீண்டும் அதே உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.