“ஜெயலலிதா வீட்டிலேயே கொலை - கொள்ளை நடந்ததுதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை! ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடிக்கத் துணிந்தவர்களைத் தண்டிக்க வேண்டாமா?”
“கோடிகளிலும் டெண்டர்களிலும் மட்டும் கவனம் செலுத்தும், அப்பாவிகளைப் பற்றிக் கவலைப்படாத அடப்பாவிகள் அ.தி.மு.க ஆட்சியாளர்கள்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (08-11-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், நீலகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.
கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
நீலகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெறும் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள மாவட்டக் கழகச் செயலாளர் முபாரக் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊட்டியைப் போலவே குளிர்ச்சியாகப் பழகக் கூடியவர் முபாரக் அவர்கள். கழகத்தின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் மலையைப் போல உறுதியானவர்.
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதில் சிகரத்தைப் போல உயரமானவர். மற்றவர் மீது அன்புச் செலுத்துவதில் கடலைப் போல ஆழமானவர். அவரிடம் கழகப் பணியைக் கொடுத்தாலும் சட்டமன்றப் பணியைக் கொடுத்தாலும் அதனை சிறப்பாகச் செய்யக்கூடியவர். அவருக்கும் அவருக்குத் துணையாக நிற்கும் கழக முன்னோடிகளுக்கும் கழகத் தோழர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே எனக்கு முன்னால் முன்னிலை உரை ஆற்றினார் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் நீலகிரிக் கூட்டம் என்பதால் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தகத்தகாய சூரியன் என்று பாராட்டப்பட்டவர் அவர். அதற்கு மேல் அவரை அடையாளப்படுத்த வேறு சொல் தேவையில்லை. நீலகிரி மக்கள் பணியையும் டெல்லி நாடாளுமன்றப் பணியையும் இரண்டு கண்களாக நினைத்து அவர் செயல்பட்டு வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நீலகிரி மாவட்டக் கழக அலுவலகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்தேன். கொரோனா காலம் என்பதால் நீலகிரிக்கு நேரில் வர இயலாத நிலையில் காணொலி மூலமாக திறந்து வைத்தேன். இன்னும் சூழ்நிலை மாறவில்லை என்பதால் காணொலி வாயிலாக இந்த எழுச்சிமிகு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காலம் முடிந்தபிறகு நீலகிரிக்கு நான் வருவேன், முத்தமிழறிஞர் கலைஞர் சிலையைப் பார்க்க ஆவலாக உள்ளேன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். கழக ஆட்சியில் - கலைஞர் ஆட்சியில் நீலகிரி மாவட்டத்துக்குச் செய்யப்பட்ட சாதனைகளைப் பட்டியலிடுவதாக இருந்தால் அதுவே பல மணிநேரம் ஆகும். அதனைச் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.
* தலைவர் கலைஞர் அவர்கள் அமைச்சர் ஆனதும் செய்த சீர்திருத்தங்களில் மிக முக்கியமானது பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்தக் கருத்தை முன்மொழிந்தாலும் கலைஞர் அவர்கள் இதனை முன்னின்று செய்து காட்டினார். அந்த வரலாற்றுச் சிறப்புமிகு திட்டத்தை ஊட்டி மாவட்டத்தில்தான் முதலில் தொடங்கினார் கலைஞர் அவர்கள்!
* உதகை ஏரியை 1970-ஆம் ஆண்டே புதுப்பொலிவுடன் புதுப்பித்தவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.
* உதகையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாளிகை கட்டுவதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்தவர் முதலமைச்சர் கலைஞர்!
* முதுமலை சரணாலயத்தை விரிவு படுத்த மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை கொடுத்ததும் முதலமைச்சர் கலைஞரே!
* இலங்கையில் உள்நாட்டுப் போர் மூண்டபோது அங்கே இருந்து திரும்புபவர்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழில் தெரிந்தவர்கள் என்பதால், 1970-ஆம் ஆண்டு கூடலூர், பந்தலூர், கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் அவர்களைக் குடியமர்த்தியவர் முதலமைச்சர் கலைஞர்.
அதுமட்டுமல்ல, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக கழகத்தை தோற்றுவித்தார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் தேயிலைச் சாகுபடி செய்யும் பணியை அவர்களுக்கு வழங்கினார்.
* உதகையில் இளம் படுகர் நலச்சங்கக் கட்டடத்தை இலவசமாகக் கட்டித் தந்த பெருமை தலைவர் கலைஞருக்கு உண்டு.
* நூறாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நீலகிரியில் 1970 முதல் தொடர்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்தவரும் முதலமைச்சர் கலைஞர் தான்!
* 2008-ஆம் ஆண்டு தேயிலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடந்த போது தொழிலாளர் கேட்ட தொகை 90 ரூபாய் தான். ஆனால் 102 ரூபாய் வழங்க உத்தரவிட்டவர் முதலமைச்சர் கலைஞர்.
* ஊட்டியில் பெரும்பான்மையாக வாழும் படுகர் சமூகத்தில் ஒரு பிரிவாக இருக்கும் துறையர் சமூகத்தினர், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அதனை நிறைவேற்றியவரும் முதலமைச்சர் கலைஞர்தான்.
* தேயிலைக்கு விலைக் குறைவு ஏற்பட்ட நேரத்தில், தேயிலை விவசாயிகளுக்கு மான்யம் வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!
* இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு அரசு தேயிலை தோட்டக் கழகம் உருவாக்கி நீலகிரியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வளித்தவர் முதலமைச்சர் கலைஞர்!
இந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1996-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் 20 சதவிகித தீபாவளி பண்டிகை போனஸ் வழங்கினார். தி.மு.க. ஆட்சியில் தடையில்லாமல் கிடைத்த இந்த போனசுக்கு அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் போராட வேண்டியதாக இருக்கிறது. அதிலும் இந்த ஆண்டு 20 சதவிகிதத்திற்கு பதிலாக 10 சதவிகிதம் தான் கொடுத்திருக்கிறது இந்த எடப்பாடி அரசு.
முதலமைச்சர் நீலகிரிக்கு ஆய்வு செய்ய வரும்போது, மீதியை அறிவிப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் எதுவுமே அறிவிக்கவில்லை.
* நீலகிரியில் பழங்குடி மக்கள் வாழும் அனைத்துப் பகுதிகளுக்கும் “மின் இணைப்பு” வழங்கி வண்ணத் தொலைக்காட்சிகளையும் வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!
* கூடலூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு “மின் இணைப்பு” வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!
* நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் உள்ளாட்சி கடை வியாபாரிகளுக்கு 'கடை உரிமை' நீட்டிப்புத் தந்து பெயர் மாற்றம் செய்துகொள்ள அனுமதி வழங்கினேன்!
* நீலகிரி மாவட்டத்திற்கு, அரசு நியாய விலைக் கடைகளில் “24 கிலோ அரிசி” வழங்கியதும் கழக ஆட்சியே!
* நான் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்தில் உதகைக்கு 3-வது குடிநீர்த் திட்டத்தைக கொண்டுவந்து உதகை நகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்தோம்.
* 2009-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது நீலகிரி மாவட்டத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு எற்பட்டது. 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள்.
மிக மோசமான இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட அந்தச் சூழலில் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களை ஹெலிகாப்டர் மூலம் நீலகிரிக்கு அனுப்பிவைத்து களநிலவரத்தைத் தெரிந்து கொண்டோம்.
அப்போது துணை முதல்வராக இருந்த நான் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டேன்!
கடந்த ஆண்டு ஏற்பட்ட நீலகிரி நிலச்சரிவு மிக மோசமானது. அதைக் கேள்விப்பட்டதும் மாவட்டச் செயலாளர் முபாரக்கிடம் பேசினேன். அவரும் மிகப் பதற்றமாகப் பேசினார். எனவே உடனடியாக நீலகிரி வந்தேன்.
நிலச்சரிவு ஏற்பட்டது 9, 10 தேதிகளில் என்றால் 11-ஆம் தேதியே நான் நீலகிரி வந்தேன். இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்தேன். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களைப் பார்த்தேன். வீடுகள் இழந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னேன்.
நடுவட்டம் இந்திரா நகரைச் சேர்ந்த அமுதா - சாதனா ஆகிய தாயும் மகளும் இறந்திருந்தார்கள். அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் சொன்னேன். கூடலூர் தாலுகா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் பார்த்தேன். அங்கிருந்து பந்தலூர் தாலுகா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து ஆறுதல் சொன்னேன். அங்கிருந்து எலியாட் கடை பகுதிக்குச் சென்றேன். அங்கிருந்து சேரம்பாடி செக்போஸ்ட் சென்றேன். அங்கிருந்து சேரம்பாடி முகாம், அய்யன் கொள்ளி முகாம் சென்றேன். அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னேன். அங்கிருந்து பிதர்காடு, நெவாக்கோட்டை, தேவர் சோலை, கூடலூர், நடுவட்டம் ஆகிய இடங்களுக்குச் சென்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்தேன்.
மறுநாள் குருத்துக்குளி கிராமத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்தேன். அங்கிருந்து எம்.பாலாடா வழியாக கப்பத்தொரையாடா சென்று வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டேன். எமரால்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்தேன்.
என்னோடு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர்கள் திராவிட மணி, ஆர்.கணேசன் ஆகியோரும் மாவட்டச் செயலாளர் முபாரக் அவர்களும் முன்னாள் அமைச்சர் க.ராமச்சந்திரன் அவர்களும் வந்தார்கள்.
நீலகிரியே நிலச்சரிவால் நிர்மூலம் ஆகி இருந்த துயரமான காட்சியை அன்றைய தினம் நான் பார்த்தேன்.
இந்த மோசமான சூழலை அன்றைய தினம் அ.தி.மு.க. அரசு உணரவில்லை. உணர்ந்து செயல்படவில்லை. முகாமில் தங்கவைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு முழுமையான நிவாரணப் பொருள்கள் தரப்படவில்லை. போதிய உணவு தரப்படவில்லை, சுத்தமான உணவாக அது தரப்படவில்லை. குடிநீர் தரப்படவில்லை என்று நான் சந்தித்தபோது பொதுமக்களே சொன்னார்கள். ஆயிரக்கணக்கானவர்களை ஒரே மண்டபத்தில் தங்க வைத்தது அரசு. அதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. கழிவறை, குளியல் அறை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை.
ஆனால் உணவு, குடிநீர் போன்ற ஏற்பாடுகளை தி.மு.க. நிர்வாகிகள் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை நாம் வழங்கினோம். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொகுதி மேம்பாட்டு நிதி, கழக சட்டமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி என்று சுமார் ஏழரை கோடி ரூபாயை ஒதுக்கினோம். அதை வைத்து நீலகிரியில் பல்வேறு நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.
ஒரே ஒரு அமைச்சரை மட்டும் அவசர அவசரமாக அனுப்பி வைத்தார்கள். அவரும் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் வந்து போய்விட்டார். முதலமைச்சர் வரவில்லை. முதலமைச்சர் ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினோம். முதலமைச்சர் எங்கே என்று கேள்வி கேட்டோம். அதன்பிறகு ஒரு நாள் வந்தார். அதுவும் ஹெலிகாப்டரில் வந்தார். சில இடங்களில் சில மணிநேரம் பார்த்துவிட்டுப் போய்விட்டார்.
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுமார் 350 கிலோ மீட்டருக்கு சாலைகள் பழுதடைந்து இருந்தது. இதில் சுமார் 150 கிலோ மீட்டர் பயணம் செய்து நான் அன்று பார்த்தேன். ஆனால் இந்த நாட்டை ஆளும் முதலமைச்சர் சில மணிநேரத்தோடு தனது கடமை முடிந்ததாகப் போய்விட்டார். இதுதான் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் உள்ள வேறுபாடு. மக்களுக்கு துன்ப துயரம் ஏற்பட்டால் தி.மு.க. தான் முதலில் துடிக்கும். துணையாக நிற்கும். அந்த துயரம் துடைக்கப்படும் வரை பணியாற்றும்.
மக்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அ.தி.மு.க. கண்டு கொள்ளாது. அதனைக் கவனிக்காது. இதுதான் அ.தி.மு.க. இதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
நீலகிரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள், அவர்களது தேவைகள் என்ன என்பதை நான் அறிவேன். மாவட்டச் செயலாளர் முபாரக் அதனை அவ்வப்போது எங்களுக்குச் சொல்லியும் வந்துள்ளார். கழக சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணியும் இதைப் பற்றி எனக்கு எழுதி இருக்கிறார்.
கழக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள மாணவ – மாணவியர் தடையின்றி உயர்கல்வி கற்க வசதியாக நீலகிரியிலுள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் அரசு பொறியியல் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போதைய நிலையில் வீடுகள், சிறு வணிக நிறுவனங்கள் கட்டுவதற்கு அனுமதிபெற கடுமையான சட்டச் சிக்கல்கள் உள்ளன. கழக ஆட்சி அமைந்தவுடன் இவைகளை முறைப்படுத்தி எளிமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீலகிரியில் முக்கிய விவசாயத் தொழிலான தேயிலை மற்றும் மலைக் காய்கறிகள் விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நீலகிரியில் பணிபுரியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உலக சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு பணிகள் செய்து தரப்படும். இப்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என்ன தேவை என்பதை இப்போதே நாங்கள் திட்டமிடத் தொடங்கிவிட்டோம். கழக அரசு அமைந்ததும் இவை செய்து தரப்படும். தி.மு.க. ஆட்சியின் கடந்த காலச் சாதனைகளை நான் வரிசைப்படுத்துகிறேன். மாநிலம் முழுவதும் செய்த சாதனைகளையும் சொல்கிறேன். மாவட்டங்களுக்குச் செய்த தனிப்பட்ட சாதனைகளையும் சொல்கிறேன். இப்படி அ.தி.மு.க. ஆட்சியால் சொல்ல முடியுமா? கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தோம் என்று சொல்ல முடியுமா? கடந்த பத்தாண்டு காலத்தில் எதுவும் நடக்கவில்லை. அ.தி.மு.க.வுக்குள் நடந்த குழப்பங்கள் - அதிகார வெறியில் நடந்த பதவிச் சண்டை காட்சிகளைத் தான் தமிழ்நாடு பார்த்ததே தவிர வேறு எதையும் பார்க்கவில்லை.
2011-ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அவர் வந்ததுமே பெங்களூருவில் சொத்துக் குவிப்பு வழக்கும் வேகம் பிடித்தது. 2013-ஆம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக குன்ஹா நியமிக்கப்பட்டார். அதுவரை நீதிமன்றத்துக்குப் போகாத அம்மையார் ஜெயலலிதா அங்கு தொடர்ச்சியாகச் சென்று வாக்குமூலம் கொடுத்தார்.
2014-ஆம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டது. சிறைக்குப் போனார். இதனால் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். ஜாமீனில் வெளியில் வந்த ஜெயலலிதா வீட்டுக்குள் முடங்கி இருந்தார்.
2015-ஆம் ஆண்டு மேல்முறையீட்டு விசாரணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வந்தார். அதில் இருந்தே உடல் நலம் குன்றினார். மருத்துவ சிகிச்சையில் இருந்தார். 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பன்னீர்செல்வம் தற்காலிக முதலமைச்சர் ஆக்கப்பட்டார். டிசம்பரில் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்திலேயே வருமான வரிச் சோதனை நடந்தது. துணை ராணுவப்படை தலைமைச் செயலகத்தில் நுழைந்தது. 2017-ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் பதவி விலகினார். சசிகலா முதலமைச்சராக நினைத்தார். ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் அவர் சிறைக்குப் போனார். பழனிசாமி முதலமைச்சர் ஆனார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பன்னீர்செல்வம் சொன்னார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தியது. வாக்காளர்களுக்கு 89 கோடியை பிரித்துக் கொடுக்க முதலமைச்சர் பழனிசாமி உள்பட 8 அமைச்சர்கள் திட்டமிட்டதற்கான ஆவணம் சிக்கியது. அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. போயஸ் கார்டனுக்குள் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. எடப்பாடி ஆட்சியை ஊழல் நிறைந்த ஆட்சி என்று சொன்ன பன்னீர்செல்வம், ஒரு வாரத்தில் எடப்பாடியுடன் இணைந்தார்.
2018 - 19 - 20 ஆகிய மூன்று ஆண்டுகளும் எடப்பாடி பழனிசாமியா - பன்னீர்செல்வமா என்ற மோதலில் இரண்டு அணிகளாக கட்சியும் ஆட்சியும் பிரிந்து மோதிக் கொண்டு இருக்கிறார்கள். திடீர் மோதல்கள் - திடீர் சமாதானங்கள் என்று போய்க் கொண்டு இருக்கிறது. இதுதான் கடந்த 10 ஆண்டுகளாக நாம் பார்க்கும் காட்சி. இவை அனைத்தும் அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்கள். இவர்கள் ஆளும்கட்சியாக இல்லாவிட்டால் இதனை நாமோ மக்களோ ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை.
ஆளும்கட்சியாக இருந்து கொண்டு இவர்கள் செய்து கொண்ட தொடர் மோதல் காரணமாக மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இன்னும் சொன்னால் மக்களை மறந்தே போனார்கள்.
முதல் ஐந்து ஆண்டு காலம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் ஜெயலலிதா. அடுத்த ஐந்து ஆண்டு காலம் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் பழனிசாமி. அதனால்தான் பத்தாண்டு காலத்தில் தமிழகம் பெரும் பாதாளத்துக்குத் தள்ளப்பட்டது.
இந்த பாதாளத்தில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான போர்தான் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்!
ஜெயலலிதா அவர்களுக்கு சொந்தமான கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் உள்ள பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளைச் சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப் பெரிய சாதனை என்ன என்றால், ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளை நடந்தது, கொலையும் நடந்தது, மர்ம விபத்துக்கள் நடந்தது என்பதுதான்.
கொடநாடு என்றால் ஜெயலலிதா என்று நினைக்கும் அளவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் கொடநாடுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. பல நூறு ஏக்கர் நிலங்களை தொடர்ச்சியாக வாங்கினார். இங்கே பெரிய பங்களாவைக் கட்டி அவ்வப்போது வந்து வாழ்ந்து வந்தார். சென்னையில் அவர் இல்லாவிட்டால் இங்குதான் இருப்பார்.
முதலமைச்சராக இருக்கும் போதே பல வாரங்கள் வந்து இங்கே தங்கி இருக்கிறார். இந்த பங்களாவைக் கட்டுவதற்கு ஜெயலலிதாவுக்கு பல வகையில் உதவி செய்தவர் கூடலூர் சஜீவன் என்பவர்.
ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோதே இந்த பங்களாவில் ஒரு கொள்ளை முயற்சி நடந்தது. ஆனால் அப்போது அது தடுக்கப்பட்டது. இது குறித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 ஏப்ரல் 24-ஆம் நாள் நள்ளிரவில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தின் ஒன்பதாவது எண் நுழைவாயிலில் 11 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைகிறது. ஓம் பகதூர் என்ற காவலாளியைக் கட்டிவைத்து விட்டு எஸ்டேட்டுக்குள் இந்த கும்பல் நுழைகிறது. இந்த ஓம் பகதூர் மூச்சுத்திணறால் இறந்தே போகிறார். பங்களாவில் உள்ள மிக முக்கியக் கோப்புகளை திருடிச் சென்று உள்ளார்கள். கோப்புகள் என்றால் அவை என்னென்ன என்று இன்று வரை வெளிச்சத்துக்கு வரவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவர். அப்படியானால் அவரது இந்த கொடநாடு பங்களாவில் இருந்தவை அரசாங்க கோப்புகளா என்பதும் தெரியவில்லை.
இந்த 11 பேர் கும்பலில் பெரும்பாலானவர்கள் கேரளாவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இங்கிருந்து தப்பிச் சென்றார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்களை தேடியது காவல்துறை. கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டார்கள். இதில் ஒருவர் சேலத்தைச் சேர்ந்த கனகராஜ். இவர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர்.
கனகராஜ் கைது செய்யப்பட்ட பிறகுதான் இது சாதாரண திருட்டு அல்ல, இதற்குப் பின்னால் பல்வேறு சதிகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் கொடநாடு பங்களாவில் சில சின்னச் சின்ன பொருள்கள் தான் காணாமல் போனதாகவும், அவையும் கீழே கிடந்து எடுக்கப்பட்டு விட்டது, கைப்பற்றிவிட்டோம் என்றும் காவல்துறை மறைக்க ஆரம்பித்தது.
ஜாமீனில் வெளியில் வந்த சேலம் கனகராஜ் மர்மமான முறையில் இறந்து போனார். அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் பேட்டிகள் கொடுத்தார்கள்.
இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சயான் என்பவரது மனைவியும் மகளும் மர்மமான முறையில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்கள். இதில் சயான் மட்டும் தப்பினார். இந்தச் சம்பவம் நடந்த 15-ஆவது நாள் கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தினேஷ் குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஐந்து பேர் மரணம் அடைந்த மர்மமான வழக்குத்தான் இந்த கொடநாடு வழக்கு.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் விபத்துகளிலும் - தற்கொலையும் செய்து கொண்டு இறந்து போகிறார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. யாம் அறியேன் பராபரமே! அதற்கு இதுவரை நீதி கிடைத்ததா என்றால் இல்லை! நீதி கிடைக்காது என்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஜாமீனில் வெளியில் வந்த சயான் என்பவரும் வாளையார் மனோஜ் என்பவரும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இறந்து போன கனகராஜுக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள்.
முதலமைச்சரின் பெயரை கனகராஜ் எங்களிடம் பயன்படுத்தினார் என்று வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார்கள். தங்களுக்கு உதவியதாக சஜீவன் என்பவர் பெயரையும் சயானும் வாளையார் மனோஜும் சொல்லி இருக்கிறார்கள். இந்த சஜீவன், இரண்டு நாட்களுக்கு முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரிக்கு வந்தபோது அரசு விழாவில் அருகில் இருந்துள்ளார்.
உதகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி கலந்து கொண்டு இருக்கிறார். உயரதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசுக் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்றார். இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் சஜீவன் என்பவர் கலந்து கொண்டார். இந்த சஜீவன், அவரது தம்பி சுனில் ஆகிய இருவர் பெயரும் நீதிமன்ற வாக்குமூலத்தில் இருக்கிறது.
முதலமைச்சர் மீது குற்றம் சாட்டினார்கள் என்பதால் சயானும் மனோஜும் சிறையில் தாங்கள் சித்ரவதை செய்யப்படுவதாக புகார் கூறியுள்ளனர். இந்தக் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன்பு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் சஜீவனுக்கு அ.தி.மு.க.வில் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் பதவியும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்துக்கு எதிராக அ.தி.மு.க.வினரே நீலகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கோத்தகிரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னால் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். கூடலூரில் மூன்று மாநிலச் சாலைகள் சந்திக்கும் இடத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். அதன்பிறகும் சஜீவனை தனக்கு அருகில் எடப்பாடி பழனிசாமி வைத்துக் கொள்கிறார் என்றால் கொடநாடு விஷயத்தில் எப்படி உண்மைகள் வெளியே வரும்? இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கிருஷ்ணபகதூர் என்பவர் தலைமறைவாகி பல மாதங்கள் ஆகியும் போலீசார் இன்னமும் ஏன் கைது செய்யவில்லை?
இந்த ஆட்சி எத்தகைய சந்தேகத்துக்குரிய மனிதர்களின் கையில் சிக்கி இருக்கிறது என்பது இதில் இருந்து தெரியவில்லையா? ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடிக்கத் துணிந்தவர்களைத் தண்டிக்க வேண்டாமா? இதனிடையே தற்போது கோவை சிறையில் சயான், மனோஜ் ஆகியோருக்கு கொலை மிரட்டல் போன்ற சர்ச்சையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு நடைபெற்று வருகிறது.
இப்படி கொலை, கொள்ளை, விபத்துகள், தற்கொலைகள், கைதுகள், மிரட்டல்கள் கொண்ட மாபெரும் குற்றச்சம்பவம் தான் கொடநாடு சம்பவம். இதில் முதலமைச்சர் பழனிசாமியின் பேரில் நேரடியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன என்றால், அப்படி ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அது தமிழ்நாட்டுக்கே அவமானம் இல்லையா? இந்த அவமானத்தைத் துடைக்க வேண்டாமா?
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் வரலாம். ஆனால் இது போன்ற குற்றப் புகார்கள் வருமானால் அது தமிழக வரலாற்றுக்கே ஏற்பட்ட மாபெரும் தலைக்குனிவு ஆகும். அதனால்தான் தமிழகத்தை மீட்க வேண்டும் என்கிறோம்.
கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், சுற்றுச்சூழல், சமூகநீதி, வளர்ச்சித் திட்டங்கள், புதிய நிறுவனங்கள், தொழில், ஏற்றுமதி இறக்குமதி, தமிழ் மேம்பாடு - எல்லாவற்றிலும் தமிழகம் பின் தங்கிவிட்டது. பின் தங்கி விட்டது என்பது கூட சாதாரண வார்த்தை. அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது. இதனை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வரவேண்டும். அதுதான் எனது ஒரே இலட்சியம்.
ஒரு மாநிலம், சுயாட்சி பெற்ற மாநிலமாக அமைந்தால் மட்டுமே தனது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றிவிட முடியும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கனவு கண்டார்கள். இன்றைய தமிழகம் சுயாட்சி பெற்ற மாநிலமாகவும் இல்லை. சுயாட்சியை விரும்புகிறவர் கையில் அதிகாரமும் இல்லை!
ஒரு மாநிலம், கல்வியில் முன்னேறிவிட்டால் போதும். அந்த மாநிலத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று பெருந்தலைவர் காமராசர் அவர்கள் கனவு கண்டார்கள். ஆனால் இன்று கல்விக்குத்தான் முதல் தடையே விழுகிறது.
நீட் தேர்வின் மூலமாக ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வியை எட்டாக்கனியாக மாற்றுகிறார்கள். பொறியியல் கல்லூரிகளுக்கும், கலைக் கல்லூரிகளில் சேருவதற்கும் இது போன்ற தேர்வு வரப்போவதாகச் சொல்லப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை வந்தால் 3-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு என்று பொதுத்தேர்வுகளை வைத்து கல்வித்தடைகளை உருவாக்கி விடுவார்கள்.
எனவே கல்வியில் நம்முடைய தமிழ்நாட்டுப் பிள்ளைகள் எந்த நிலைமைக்கு ஆளாகப் போகிறார்களோ என்பதை நினைக்கும் போது எனக்கு வேதனை அதிகமாகிறது. பள்ளிப் பிள்ளைகள் மீது அக்கறை உள்ள அரசாக தமிழக அரசு இல்லை! அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியல் இன, பழங்குடியினரும், பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்டவரும் - சிறுபான்மையினரும் - விளிம்பு நிலை மக்களும் - ஏழைகளும் ஏற்றம் பெற்றால் அந்த நாடு சிறப்பாக அமையும் என்று கலைஞர் அவர்கள் கனவு கண்டார்கள். அவரது எல்லாத் திட்டங்களையும் எடுத்துப் பாருங்கள். இப்படிப்பட்ட எளிய மக்களை மனதில் வைத்து தீட்டப்பட்டதாக இருக்கும்.
''கோட்டையில் உட்கார்ந்து இருந்தாலும் குடிசையையே பார்ப்பவன் நான்'" என்றார் கலைஞர். ஆனால் இன்று கோட்டையில் இருப்பவர்கள், கோட்டையில் இருப்பவர்களுக்கு சலுகை காட்டுபவர்களாக, கோடிகளில் மட்டும் குறிக்கோள் கொண்டவர்களாக, டெண்டர்களில் மட்டும் கவனம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். அப்பாவிகளைப் பற்றிக் கவலைப்படாத அடப்பாவிகள் இவர்கள்! இந்த அரசியல் சூழல் தான் 'தமிழகம் மீட்போம்' என்ற முழக்கத்தை உரக்க முழங்கச் சொல்கிறது.
கடல் கடந்து சென்று தமிழனின் பெருமையை நிலைநாட்டினார்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்கள். இன்று கடல் கடந்து செல்லும் செய்திகள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. இந்த அவமானத்தைத் தடுத்து நிறுத்தும் போர் தான், வருகின்ற சட்டமன்றத் தேர்தல். நம்மால் இது முடியும். இந்தக் கொள்ளைக் கூட்டத்தை விரட்டுவது மட்டுமல்ல, அந்த இடத்தில் அமர்ந்து நல்லாட்சியைத் தர திராவிட முன்னேற்றக் கழகத்தால் மட்டுமே முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்பது தமிழகத்தை முன்னேற்றும் ஆட்சியாக அமையும் என்ற வாக்குறுதியுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்! என உரையாற்றினார்.