“திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ராஜஸ்தானும், பிற மாநிலங்களும் பட்டாசு வெடிக்க விதித்துள்ள திடீர் தடையை உடனடியாக விலக்கக் கோரி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் அவர்களுக்கும், மத்திய சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் அவர்களுக்கும் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும் கழகப் பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்.பி. இன்று அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தக் கடிதத்தின் விவரம் பின்வருமாறு:
ராஜஸ்தான் மாநிலமும் அதனைத் தொடர்ந்து பல மாநிலங்களும் தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் பட்டாசு வெடிக்க திடீர் தடை விதித்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களின் இந்த ஒரு தலைபட்சமான முடிவு தமிழகத்திலுள்ள பட்டாசு தொழிலை கடுமையாக பாதிப்பதுடன் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வேலைவாய்ப்புகளையும் பறித்திடும் பேராபத்தை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பட்டாசு தொழில் சம்பத்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் அது தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்புப் பிரச்சினைகளையும் அக்குவேறு ஆணிவேராக ஆய்வு செய்தபின் பட்டாசு வெடிப்பதை அனுமதித்துள்ளது. தீபாவளி நாளில் இரண்டு மணிநேரத்திற்கு பட்டாசுகள் வெடிக்கலாம் என்ற நேர அளவையும் விதித்து உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. எனவே, பட்டாசுகள் வெடிப்பதற்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் அனுமதி உள்ளது.
பட்டாசு மற்றும் வெடிகள் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள வழிகாட்டுதல்படியே தயாரிக்கப்படுகின்றன என்பது மட்டுமல்லாமல் குறைந்த அளவே நச்சு வேதிப்பொருட்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், தயாரிப்பு முறையும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு மையம் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் போன்ற மத்திய அரசின் நிறுவனங்களின் பரிந்துரைகளை முழுவதுமாக பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் பட்டாசுகள் தயாரிப்பு முறை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது.
எனவே, பட்டாசுகள் தயாரிப்பு முறையோ வெடிகள் வெடிப்பதோ சுற்றுச்சூழல் மீது எவ்வித மோசமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கோவிட் - 19 தொற்று நோயாளிகளுக்கு பட்டாசு வெடிப்பதால் பாதிப்பு ஏற்படும் என இதுவரை எந்த ஆய்வும் உறுதியாக தெரிவிக்கவில்லை. ஆக அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு பட்டாசு தொழிலில் தொண்ணூறு சதவீதம் அளவுக்கு தமிழ்நாட்டின் சிவகாசி பகுதி பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதையும் இங்கே உற்பத்தியாகும் பட்டாசுப் பொருட்கள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவே உள்ளன என்பதையும் இந்நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த உண்மைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் பல்வேறு மாநில அரசுகள் தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதித்திருப்பது தமிழகத்தை சேர்ந்த 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பேராபத்திலுள்ளது. இந்த ஆதாரமற்ற, அறிவியல் உண்மைகளுக்கு புறம்பான தடை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல தமிழகத்தில் அமைந்துள்ள பட்டாசு தொழிலின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த மோசமான நிலைமையை அகற்றவும் பல்வேறு மாநிலங்கள் விதித்துள்ள தடையை நீக்கவும் தாங்கள் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று வேண்டுகிறேன்.
இந்த விஷயத்தில் ஒருவேளை மாநிலங்கள் தடையை நீக்க தயங்கினால் பட்டாசு தொழில் அதிபர்களும் லட்சகணக்கான தொழிலாளர்களும் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். னவே, இந்த அல்லல்களை கருத்தில் கொண்டு தொழிலார்களுக்கும் பட்டாசு தொழில் உரிமையாளர்களுக்கும் உரிய இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தீபாவளி போன்ற பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகை காலத்தில் இத்தகைய திடீர் தடையினால் ஏற்படும் இழப்பிலிருந்து தொழிலாளர்களை பாதுகாப்பது மத்திய அரசின் கடமை என்பதையும் தாங்கள் ஏற்பீர்கள் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி. ஆர். பாலு குறிப்பிட்டுள்ளார்.