தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை உருவாக்கி அதில் தாயகம் திரும்பிய தமிழர்கள் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களை வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தார்.
மேலும் அவர்கள் வசிக்க குடியிருப்புகள், குழந்தைகள் கல்வி கற்க பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்த கலைஞர் ஆட்சியில், தோட்டத் தொழிலாளர்கள் கேட்காமலேயே 20 சதவீத போனஸ் தீபாவளி பண்டிகைக்கு வழங்கி வந்தார்.
ஆனால் பத்தாண்டு அ.தி.மு.க ஆட்சியில் சம்பள உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையில், தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களை வஞ்சித்து வரும் எடப்பாடி அரசு தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிராகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு தேயிலை விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் (Tantea) உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் அதிக லாபம் தரும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 12,000 பேருக்கு 10.2 சதவீத போனஸ் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்து. அதையும் இன்னும் வழங்காத நிலையில், இம்முறை அதிக லாபத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் தங்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.
ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை நிராகரித்ததால் உடனடியாக 20 சதவீத போனஸ் மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உதகை வரும் இந்நாளில் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதகை வரும்போது தோட்டத் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வேலையை புறக்கணித்து எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அ.தி.மு.க-வினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.