ராமேஸ்வரம் கோவிலுக்குச் சொந்தமாக தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட 65 வகையான விலைமதிப்பு மிக்க ஆபரணங்கள் உள்ளன. இந்த ஆபரணங்கள் அனைத்தும் கோவில் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா, ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் நவராத்திரி திருவிழா உள்ளிட்ட விழா நாட்களில் கடவுள் சிலைகளுக்கு இந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும்.
இந்நிலையில் ராமேஸ்வரம் கோவிலில் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 2019ம் ஆண்டு அனைத்து வகை ஆபரணங்களையும் சரிபார்த்து, நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் மறு மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது, கோவிலில் சாமி சிலைகளுக்கு அணிவிக்கப்படும் பல நகைகளில், எடை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
நகைகளின் ‘எடை குறைவு’ குறித்து கோவிலில் பணியாற்றும் குருக்கள், மணியம் மற்றும் ஓய்வு பெற்ற குருக்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கோவில் நிர்வாகத்தால் அபராத தொகையுடன் கூடிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நோட்டீசில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரையிலும் அபராதம் செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவில் நகைகள் எவருக்கும் தெரியாமல் திருடப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.