ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மீது ஆளுநர் தற்போதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதற்கிடையே, தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது பேரறிவாளனின் கருணை மனு மீது தமிழக ஆளுநர் முடிவெடுக்காததற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைவில் முடிவெடுத்து உத்தரவிட வேண்டும் என விரும்புவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்தைக் குறிப்பிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும். அ.தி.மு.க அரசு மௌனம் காக்காமல் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு சிறைவாசிகளான 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் வரையறையின்றிக் காலம் தாழ்த்தி வருவது மனித நேயமற்றதும், அதிகார அத்துமீறலானதுமான செயலாகும்.
29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களில் ஒருவரான பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.
இதன் பிறகாவது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும். எடப்பாடி அ.தி.மு.க. அரசும் இனியும் வாய் மூடி வேடிக்கை பார்த்திராமல் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும்!" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, “பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.