தமிழ்நாடு

“நெடிய வரலாறு கொண்ட தமிழ்நாடு நாளில் சமத்துவம் மலர உறுதியேற்போம்” - CPI முத்தரசன் வேண்டுகோள்!

நீண்ட வரலாறு கொண்ட தமிழ்நாடு பிறந்த தினத்தில், தமிழகத்தில் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு தளங்களில் சமத்துவம் மலர உறுதியேற்போம்.

“நெடிய வரலாறு கொண்ட தமிழ்நாடு நாளில் சமத்துவம் மலர உறுதியேற்போம்” - CPI முத்தரசன் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நவம்பர் 1ம் தேதி ’தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “நாட்டின் காலனி ஆதிக்க விடுதலைப் போராட்டம் நிறைவடைந்த நிலையில், சென்னை மாகாணம் என்றிருந்த பகுதியில், தமிழ்பேசும் மக்களைக் கொண்ட பகுதியை பிரித்து “தமிழ்நாடு” என்று தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மொழிவாரி மாநிலங்கள் அமையும்போது தமிழ் மொழி பேசும் மக்கள் பகுதியினைக் கொண்டு தமிழ்நாடு அமைய வேண்டியதன் அவசியத்தை கம்யூனிஸ்டு கட்சியின் புகழார்ந்த தலைவர்கள் புபேஷ்குப்தா, பி.ராமமூர்த்தி, தி.மு.க தலைவர் பேரறிஞர் அண்ணா ஆகியோர் மாநிலங்களவையில் ஆற்றிய உரை ஆவணமாக பதிந்துள்ளது.

மத்திய அரசு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் திட்டத்தின் படி தமிழ் பேசும் மக்கள் பகுதியை பிரித்து ‘மெட்ராஸ் ஸ்டேட்’ அமைத்தது.

“நெடிய வரலாறு கொண்ட தமிழ்நாடு நாளில் சமத்துவம் மலர உறுதியேற்போம்” - CPI முத்தரசன் வேண்டுகோள்!

முன்னோடி தேச விடுதலைப் போராட்ட வீரர்கள் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் பகுதி முழுவதும் ‘தமிழ்நாடு’ எல்லைக்குள் வர வேண்டும் என வலியுறுத்தினர். இதன் மீது சிலம்புச் செல்வர் ம.பொ.சி., திருவிதாங்கூர் மார்ஷல், ஏ.நேசமணி போன்றோர் இயக்கம் கண்டதையும், ப.ஜீவானந்தம் உள்ளிட்ட தமிழறிஞர்களும் போராடியதையும், தியாகி சங்கரலிங்கனார் 12.07.1956 தொடங்கி 13.10.1956 வரை 75 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் ஈகை செய்ததை நினைவு கூர்ந்து வணங்குவோம்.

‘மதராஸ் ஸ்டேட்’ என்று அழைத்தது வந்த பெயரை மாற்றி ‘தமிழ்நாடு’ என்று அழைக்கப்படும் என்று 1968 ஜூலை 18 ஆம் தேதி அறிஞர் அண்ணா அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழ்நாடு மாநிலம் அமைந்த நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு அரசு பிறந்த தினமாக கொண்டாட வேண்டும் நீண்டகாலமாக வலியுறுத்தியதைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தினம் அரசு விழாவாகக் கொண்டாடுவது என்ற அரசாணை வெளியிட்டது.

இந்த நீண்ட வரலாறு கொண்ட தமிழ்நாடு பிறந்த தினத்தில், தமிழகத்தில் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு தளங்களில் சமத்துவம் மலரவும், மனிதர்களை பிளவுபடுத்தி, ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தும், மேன்மை, தீட்டு என கற்பிதங்களை உருவாக்கிய ‘மனுஸ்மிருதி’ யினை நிராகரிப்போம் என உறுதி ஏற்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக மக்களுக்கு தமிழ்நாடு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories