மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் பன்வரிலால் புரோகித் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீட் தேர்வுகள் முடிந்த பின்னரும் உள் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்ததையடுத்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்ததோடு, அதுகுறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தனர்.
உடனடியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என வலியுறுத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த வருடமே அமல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிடவேண்டும் என தி.மு.க எம்.பி வில்சன் அறிவுறுத்திய நிலையில், தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.
7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா இயற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தை கேட்டறிந்த பின்னர் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில், வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!
தி.மு.க. நடத்திய போராட்டமும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆளுநருக்கு உளப்பூர்வமாக முன்வைத்த வேண்டுகோள்களும், ஆளுநரின் மனமாற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. காரணம் என்னவாக இருந்தாலும் இறுதியில் வென்றது சமூகநீதி! எப்போதும் வெல்லும் சமூகநீதி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.