சென்னையில் கனமழை பெய்ததால் நகர் முழுவதும் சாலையில், தெருக்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையின் தாழ்வான பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. அ.தி.மு.க அரசு மழைநீர் வடிகால்களை சரிவர பராமரிக்கப்படாததால் சென்னை மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து வேதனை தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “எடப்பாடி அரசால் முடியவில்லை என்றால், தயவு செய்து பேரிடர் மீட்புப் படையை அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைத்து, சென்னை மாநகரைக் காப்பாற்றப் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீண்டும் ஒரு டிசம்பர் 2015 வெள்ளம் ஏற்பட்டு விடாமல் தடுக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் அ.தி.மு.க. அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் விரிவான முறையில் செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் ஏற்பட்டுள்ள அவலம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “வீடு - சாலை எங்கும் வெள்ளம். ஒரு நாள் மழைக்கே சென்னை மிதக்கிறது. உள்ளாட்சித் துறையை ஊழலாட்சித் துறை ஆக்கிவிட்ட வேலுமணியும், அவரது டெண்டர் பார்ட்னர் எடப்பாடியும் அவதூறு போஸ்டர் ஒட்டிய நேரத்தில் கொஞ்சமாவது வடிகால்களை தூர்வாரியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
2015 வெள்ளத்திலிருந்து அடிமைகள் பாடம் கற்கவில்லை. மாறாக இன்னும் வீரியமாக ஊழல் செய்கின்றனர். வெள்ளத்தடுப்பு பணிக்கான நிதியை வேலுமணியின் ஏழு கம்பெனி பினாமிகள் - மாநகராட்சி ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே இந்த அவலத்துக்கு காரணம். மக்கள் மறக்க மாட்டார்கள் அடிமைகளே..!” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.