தமிழகத்தில் உள்ள தொல்லியல் நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை பொதும்பைச் சேர்ந்த புஷ்பாவனம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இந்தியா முழுவதும் 3691 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 412 தொல்லியல் நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த நினைவுச் சின்னங்களுக்கு ஆண்டு முழுவதும் பார்வையாளர்கள் வருகின்றனர்.
தமிழகத்துக்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்வதால் நினைவுச் சின்னங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் இந்திய தொல்லியல் கழகத்துக்கு சென்னை, திருச்சி வட்ட அலுவலங்கள் உள்ளன. இவற்றில் போதுமான பணியாளர்கள் இல்லை.
எனவே, தமிழகத்தில் தூத்துக்குடி அல்லது ராமநாதபுரத்தில் புதிதாக தொல்லியல் வட்டம் உருவாக்கவும், தமிழக தொல்லியல் நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கவும், தொல்லியல் வட்டங்களில் பணியாளர் காலியிடங்களை உடனடியாக நிரப்பவும், தமிழகம் முழுவதும் தொல்லியல் நினைவுச் சின்னங்களில் தொல்லியல் அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளவும், நினைவுச் சின்னங்களில் நவீன கழிப்பறை, உணவகம், மருந்தகம் அமைக்கவும், மாற்றுத்திறனாளிகள் பார்வையிடுவதற்கு வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.