திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கல கூட்ரோடு அருகில் லாரியில் கஞ்சா கடத்துப்பட்டு வருவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் கண்ணமங்கல காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட போலிஸார் கண்ணமங்கலம் கிராமத்தின் கூட்ரோடு அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வேலூர்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் 3 மூட்டைகளில் சுமார் 100 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தன.
இது சம்மந்தமாக திருநெல்வேலி மாவட்டம் பாளையகோட்டை பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் லூர்து அந்தோணி என்பவர் கொல்கத்தாவிலிருந்து சிமெண்ட் மூல பொருட்களை கொண்டு வரும் போது அதே லாரியில் ஆந்திரா விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் லாரி ஓட்டுனர் லூர்து அந்தோணியையும், அவரது கூட்டாளிகளான திருவண்ணாமலையை சேர்ந்த உலகநாதன்(46) ஜாகிர்உசேன் (45) ஆகியோரிடம் இருந்து கண்ணமங்கல போலிஸார் சுமார் 100 கிலோ கஞ்சாவை லாரியுடன் பறிமுதல் செய்து 3 பேர் மீதும் வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா அதிகளவில் விற்பனை நடைபெறுவதாக குற்றசாட்டு எழுந்த வந்த நிலையில் தற்போது கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்த சம்பவத்திற்கு போலிஸாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.